டிரம்பிற்கு வழங்கப்பட்ட ஹனுமான் சாலிசா! வெள்ளை மாளிகையில் அகல் விளக்கேற்றி தீபாவளி கொண்டாட்டம்!

அமெரிக்க அதிபரின் அதிகாரப்பூர்வ இல்லமான வெள்ளை மாளிகையில் உள்ள ஓவல் அலுவலகத்தில் தீபாவளி பண்டிகை கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது. அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பங்கேற்று, பாரம்பரிய முறைப்படி அகல் விளக்குகளை ஏற்றித் தீபாவளிக் கொண்டாட்டங்களைத் தொடங்கி வைத்தார்.

டிரம்பிற்கு வழங்கப்பட்ட ஹனுமான் சாலிசா

இந்தக் கொண்டாட்டத்தில் இந்திய அமெரிக்க அதிகாரிகள், முன்னணி தொழில் அதிபர்கள் மற்றும் அமைப்பின் தலைவர்கள் பலர் கலந்து கொண்டனர். ‘ஜிஓக்யூஐஐ’ (GOQii) நிறுவனத்தின் நிறுவனரும் இந்தியத் தொழில் அதிபருமான விஷால் கோண்டல் அதிபர் டிரம்பைச் சந்தித்து வாழ்த்துகளைப் பகிர்ந்து கொண்டார். இந்தச் சந்திப்பின் போது, தைரியம் மற்றும் நம்பிக்கையின் அடையாளமாகக் கருதப்படும் துளசிதாசரின் ‘ஹனுமான் சாலிசா’ புத்தகத்தை அவர் அதிபர் டிரம்பிற்குப் பரிசாக வழங்கினார்.

“அகல்களின் ஒளி ஏற்றிய போது, இந்திய-அமெரிக்க நட்பு தொடர வேண்டும் என்றும், இருள் அகன்று ஒளி பெருக வேண்டும் என்றும் பிரார்த்தனை செய்தேன்” என்று விஷால் கோண்டல் தனது சமூக வலைதளப் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

முக்கியப் பிரமுகர்கள் பங்கேற்பு

அமெரிக்காவிற்கான இந்தியத் தூதர் வினய் மோகன் குவாத்ரா, எஃப்பிஐ இயக்குனர் காஷ் படேல், பிரபல சமையல் கலைஞர் விகாஸ் கண்ணா, ஐபிஎம் சிஇஓ அரவிந்த் கிருஷ்ணா மற்றும் அமெரிக்க தேசிய சுகாதார நிறுவனத்தின் இயக்குனர் ஜெய் பட்டாச்சார்யா உள்ளிட்ட பல முன்னணி பிரமுகர்கள் இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வில் கலந்துகொண்டனர்.

வெள்ளை மாளிகையில் தீபாவளிக் கொண்டாடும் மரபு 2003 ஆம் ஆண்டு அதிபர் ஜார்ஜ் டபிள்யூ புஷ் காலத்தில் தொடங்கியது. தொடர்ந்து 2009 ஆம் ஆண்டு அப்போதைய அதிபர் பராக் ஒபாமா முதன்முதலாக வெள்ளை மாளிகையின் ஈஸ்ட் ரூமில் விளக்கேற்றினார். அதன் தொடர்ச்சியாக, தற்போது அதிபர் டொனால்ட் டிரம்ப் தலைமையிலும் இந்த சிறப்பு நிகழ்வு இனிதே நடைபெற்றது.