அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் இரண்டாவது ஆட்சிக்காலத்தில், இதுவரை 2.50 லட்சத்திற்கும் அதிகமான வெளிநாட்டினரின் விசாக்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அமெரிக்க வெளியுறவுத் துறை (US Department of State) அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அமெரிக்காவில் குடியேற்ற விதிகளைக் கடுமையாக்கி வரும் டிரம்ப் நிர்வாகத்தின் இந்த நடவடிக்கை சர்வதேச அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
‘அமெரிக்கா அமெரிக்கர்களுக்கே’ (America First) என்ற கொள்கையை தீவிரமாகச் செயல்படுத்தி வரும் அதிபர் டிரம்ப், அந்நாட்டின் குடியேற்றக் கொள்கைகள் மற்றும் விசா விதிகளில் பல புதிய கட்டுப்பாடுகளைக் கொண்டுவந்துள்ளார். வெளிநாட்டினருக்கு வழங்கப்படும் விசா என்பது சலுகையே தவிர உரிமையல்ல என்று தெரிவித்துள்ள வெளியுறவுத்துறை, அமெரிக்காவில் நுழைந்த பிறகும் விசா வைத்திருப்பவர்களைத் தொடர் கண்காணிப்பிற்கு உட்படுத்தி வருகிறது.
தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாகக் கருதப்படும் நபர்கள், விசா விதிகளையும் காலக்கெடுவையும் மீறியவர்கள், போலி ஆவணங்கள் மூலம் விசா பெற்றவர்கள் மற்றும் குற்றச் செயல்களில் ஈடுபட்டவர்கள் ஆகியோரின் விசாக்கள் இந்த நடவடிக்கையின் மூலம் ரத்து செய்யப்பட்டுள்ளன. மேலும், பிறப்பு மூலம் குடியுரிமை பெறும் ‘பெர்த் டூரிஸம்’ (Birth Tourism) முறையைப் பயன்படுத்திய சுமார் 2,300 விசாக்களும் ரத்து செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்கக் குடிமக்களின் பாதுகாப்பு மற்றும் நாட்டின் பொருளாதாரப் நலன்களைப் பாதுகாப்பதே முதன்மை நோக்கம் எனத் தெரிவித்துள்ள வெளியுறவுத் துறை, விதிமீறல்களில் ஈடுபடும் வெளிநாட்டினரின் விசாக்கள் உடனடியாக ரத்து செய்யப்பட்டு அவர்கள் வெளியேற்றப்படுவார்கள் என்று எச்சரித்துள்ளது. டிரம்ப் அரசின் இந்த அதிரடி நடவடிக்கையால் அமெரிக்காவில் உயர்கல்வி பயிலும் மாணவர்கள், தகவல் தொழில்நுட்ப ஊழியர்கள் மற்றும் புலம்பெயர்ந்தோர் மத்தியில் பெரும் பதற்றம் நிலவி வருகிறது.