அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பைக் கொல்லப்போவதாக மிரட்டல் விடுத்து, வாஷிங்டனில் உள்ள வெள்ளை மாளிகை அருகே அதிபயங்கர ஆயுதங்களுடன் சுற்றிய நபரை அமெரிக்க ரகசிய காவல்படையினர் (Secret Service) அதிரடியாகக் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட நபர் வெனிசுலா நாட்டைச் சேர்ந்த ரோனி யோர்ட்ரிக்ஸ் குவானிபா சினோஸ் (30) என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
திருடப்பட்ட காரும் பயங்கர ஆயுதங்களும்
வியாழக்கிழமை மாலை வெள்ளை மாளிகையின் கான்ஸ்டிடியூஷன் அவென்யூ பகுதியில் சந்தேகத்திற்கிடமான முறையில் நிறுத்தப்பட்டிருந்த ஒரு காரை ரகசிய காவல்படை அதிகாரிகள் கவனித்தனர். காரில் இருந்த ரோனி யோர்ட்ரிக்ஸிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தியபோது, “வாஷிங்டனுக்குச் சென்று அதிபர் டிரம்பைக் கொல்லுமாறு எனது தலையில் அசரீரி குரல்கள் கேட்டன” என்று அவர் கூறி அதிர்ச்சியளித்தார்.
இதனைத் தொடர்ந்து நடத்தப்பட்ட சோதனையில், அவர் பயன்படுத்திய கார் தென் கரொலைனாவில் இருந்து திருடப்பட்டது என்பது தெரியவந்தது. மேலும் காரின் உள்ளே இருந்து ஏஆர்-15 ரக தாக்குதல் துப்பாக்கி, மேக் 10 சப்மெஷின் துப்பாக்கி, க்ளாக் 43எக்ஸ் கைத்துப்பாக்கி மற்றும் பல தோட்டாக்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
அமெரிக்க உள்நாட்டுப் பாதுகாப்பில் கிளம்பிய சர்ச்சை
கைது செய்யப்பட்ட ரோனி யோர்ட்ரிக்ஸ் கடந்த 2024 ஆம் ஆண்டு சட்டவிரோதமாக அமெரிக்க எல்லை வழியாக நாட்டிற்குள் நுழைந்தவர் என்றும், தற்போது அவர் மீது உரிமம் இன்றி துப்பாக்கி வைத்திருத்தல், கார் திருட்டு, அரசுக்கு எதிரான அச்சுறுத்தல் உள்ளிட்ட பல பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் உள்துறை பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பிற்கு எதிரான கொலை மிரட்டல் மற்றும் தாக்குதல் முயற்சிகள் அதிகரித்து வரும் நிலையில், வெள்ளை மாளிகை அருகே ஆயுதங்களுடன் நபர் ஒருவர் பிடிபட்ட சம்பவம் அமெரிக்க அரசியல் வட்டாரத்தில் மீண்டும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.