வாட்ஸ்அப்பில் ஆதார், பேன் கார்டு அனுப்புறீங்களா? பெரிய ஆபத்து காத்துட்டு இருக்கு… சைபர் நிபுணர்கள் எச்சரிக்கை!

“ஹோட்டல் ரூம் புக் பண்றீங்களா? ஆதார் கார்டை வாட்ஸ்அப்ல அனுப்புங்க…”, “வங்கி கடன் வேணுமா? பேன் கார்டு, பேங்க் ஸ்டேட்மெண்ட்டை வாட்ஸ்அப் பண்ணுங்க…” – இனிமேல் யாராவது உங்ககிட்ட இப்படிப் கேட்டா, தயவுசெஞ்சு உடனே ‘நோ’ சொல்லிடுங்க! ஏன்னா, நம்ம ஊர்ல பலரும் ரொம்ப சாதாரணமா நினைக்கிற இந்த ஒரு பழக்கம்தான், இன்னைக்கு லட்சக்கணக்கான பேரோட தனிநபர் டேட்டாவை ஹேக்கர்கள்கிட்ட கொண்டு போய் சேர்க்குதுன்னு சைபர் பாதுகாப்பு நிபுணர்கள் கதறிக் கூப்பாடு போடுறாங்க!

நம்ம ஆளுங்க “வாட்ஸ்அப்லதானே அனுப்புறோம், அதுலதான் எண்ட்-டூ-எண்ட் என்க்ரிப்ஷன் (End-to-End Encryption) இருக்கே… அப்புறம் என்ன பயம்?” அப்படின்னு ரொம்பவே அசால்ட்டா நினைச்சுடுறாங்க. ஆனா, ஆபத்தே இங்கதான் ஒளிஞ்சிருக்கு! நீங்க அனுப்புற ஆவணங்களை எதிர் முனையில் இருக்கும் நபர் தனது போனிலோ அல்லது லேப்டாப்பிலோ டவுன்லோட் செய்யும்போது, அது உடனடியாக அவர்களுடைய தனிப்பட்ட க்ளவுட் பேக்கப்பில் (Cloud Backup) போய் சேமிக்கப்படும்.

ஒருவேளை அந்த நபரின் போனோ அல்லது லேப்டாப்போ எதிர்காலத்தில் ஹேக் செய்யப்பட்டாலோ, அல்லது வைரஸ் தாக்குதலுக்கு ஆளானாலோ, உங்களோட ஆதார், பேன் கார்டு மற்றும் வங்கி கணக்கு விவரங்கள் மொத்தமும் சைபர் குற்றவாளிகளின் கைகளுக்குச் சுலபமாக மாறிவிடும். அதுமட்டுமில்லாம, வாட்ஸ்அப் வழியா அனுப்பப்பட்ட டேட்டா திருடப்பட்டால், சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் மீது உங்களால் சட்டப்படி எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாது! ஏன்னா, தனிநபர் வாட்ஸ்அப் எண்களுக்கு ஆவணங்களை அனுப்புவது அதிகாரப்பூர்வ சைபர் பாதுகாப்பு விதிமுறைகளுக்குள்ளேயே வராது.

அப்புறம் எப்படித்தான் ஆவணங்களைப் பாதுகாப்பா அனுப்புறது? இனிமேல் எந்த நிறுவனமும் ஆவணங்களைக் கேட்டால், வாட்ஸ்அப்பில் அனுப்ப மறுத்துவிட்டு, அவர்களது அதிகாரப்பூர்வ இணையதள போர்ட்டல் அல்லது பாதுகாப்பான லிங்க் வழியா மட்டும் அப்லோட் செய்யுங்கள். முடியாத பட்சத்தில் ‘டிஜிலாக்கர்’ (DigiLocker) அல்லது மத்திய அரசின் அதிகாரப்பூர்வ ஆஃப்லைன் வெரிஃபிகேஷன் வழிகளைப் பயன்படுத்துங்கள். ரொம்பவே தவிர்க்க முடியாத சூழலில் வாட்ஸ்அப்பில் அனுப்ப வேண்டி வந்தால், அந்த ஆவணங்களுக்குப் பாஸ்வேர்ட் செட் செய்து (Password Protected) அனுப்புவதோடு, ஆதாரின் கடைசி 4 எண்கள் மட்டுமே தெரியக்கூடிய ‘மாஸ்க்டு ஆதார்’ (Masked Aadhaar) பிரதிகளை மட்டுமே பயன்படுத்துங்கள்!