“10 நாட்கள் தூணில் கட்டிப்போட்டு கொடூரம்!” – பேய் ஓட்டும் பூஜையால் இளம்பெண் பரிதாப பலி!

மருத்துவ சிகிச்சைக்குப் பதிலாக மூடநம்பிக்கை வழிபாட்டை நம்பி, 10 நாட்கள் தூணில் கட்டிப்போடப்பட்ட இளம்பெண் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. லக்னோவின் கோமதி நகர் பகுதியைச் சேர்ந்த 33 வயதான ரூபி யாதவ் என்ற பெண்மணி, மனநலக் குறைபாட்டால் அவதிப்பட்டு வந்துள்ளார். அவரைத் தகுந்த மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சை அளிப்பதற்குப் பதிலாக, அவரது கணவர் அங்கித் யாதவ் அருகில் உள்ள பாராபங்கி மாவட்டத்தில் உள்ள தேவா பகுதியில் இயங்கி வந்த வழிபாட்டுத் தலத்திற்கு அழைத்துச் சென்றுள்ளார்.

அங்கு அந்தப் பெண்ணுக்கு மனநலக் குறைபாட்டைக் குணப்படுத்துவதாகவும், துஷ்ட சக்திகளை விரட்டுவதாகவும் கூறி, நோய் தீர்க்கும் பரிகார பூஜை என்ற பெயரில் அவரை ஒரு தூணில் கட்டிப்போட்டுள்ளனர். 71 வயதான முன்னா என்ற போலி சாமியாரும், அவரது 55 வயது உதவியாளரான காதிர் அகமதுவும் சேர்ந்து அந்தப் பெண்ணை 10 நாட்களாக உணவின்றி, கடுமையான கவனிப்பாரின்றி சித்திரவதைக்கு ஆளாக்கிப் பேய் ஓட்டும் சடங்குகளைச் செய்து வந்துள்ளனர். இதன் காரணமாகத் தொடர்ந்து உடல்நிலை மோசமடைந்த ரூபி யாதவ் பரிதாபமாக உயிரிழந்தார்.

தனது மகளின் உயிரிழப்பிற்குப் பேய் ஓட்டும் சடங்கும், முறையான பராமரிப்பின்றி கைவிடப்பட்டதே காரணம் என்று கூறி இறந்துபோன பெண்ணின் தந்தை காவல்துறையில் அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து, பெண்ணின் கணவர் அங்கித் யாதவ், போலி சாமியார் முன்னா மற்றும் அவரது உதவியாளர் காதிர் அகமது ஆகிய மூவரையும் பாராபங்கி காவல்துறையினர் உடனடியாகக் கைது செய்து நீதிமன்றக் காவலில் அடைத்தனர். மேலும், பிரேதப் பரிசோதனை அறிக்கை வந்தவுடன் அடுத்தகட்ட சட்ட நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.