கொசுக்களால் பரவும் மலேரியா, டெங்கு, சிக்குன்குனியா மற்றும் ஜிகா போன்ற ஆபத்தான நோய்கள் குறித்துப் பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில், ஆண்டுதோறும் ஆகஸ்ட் 20-ஆம் தேதி ‘உலக கொசுக்கள் தினம்’ (World Mosquito Day) கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
வரலாற்றுப் பின்னணி: இந்த தினத்திற்குப் பின்னால் ஒரு முக்கியமான மருத்துவ வரலாற்றுச் சம்பவம் ஒளிந்துள்ளது. கடந்த 1897-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 20-ஆம் தேதி, பிரிட்டிஷ் மருத்துவ அதிகாரியான சர் ரொனால்ட் ரோஸ் (Sir Ronald Ross), பெண் அனாஃபிலீஸ் (Anopheles) வகை கொசுக்கள் மூலமாகவே மனிதர்களுக்கு மலேரியா பரவுகிறது என்பதைக் கண்டறிந்தார். இந்தியாவிலேயே மேற்கொள்ளப்பட்ட இந்த வரலாற்று சிறப்புமிக்கக் கண்டுபிடிப்பை நினைவுகூரும் வகையிலும், கொசுக்களால் பரவும் நோய்களை ஒழிப்பதற்கான விழிப்புணர்வை விதைக்கும் வகையிலும் இந்நாள் உலகளாவிய அளவில் அனுசரிக்கப்படுகிறது.
கொசுக்களால் பரவும் முதன்மை நோய்கள்:
-
டெங்கு காய்ச்சல்: ஏடீஸ் (Aedes) வகை கொசுக்களால் பரவும் இது, தீவிரக் காய்ச்சல் மற்றும் தட்டணுக்கள் (Platelets) குறைபாட்டை ஏற்படுத்துகிறது.
-
மலேரியா: அனாஃபிலீஸ் கொசுக்களால் பரவி, ரத்த சிவப்பு அணுக்களைப் பாதித்து ஆபத்தான நிலைக்குக் கொண்டு செல்லும்.
-
சிக்குன்குனியா & ஜிகா: ஏடீஸ் கொசுக்கள் மூலம் பரவி, கடுமையான மூட்டு வலி மற்றும் உடல் உபாதைகளை உண்டாக்கும்.
தடுப்பு முறைகள் மற்றும் பாதுகாப்பு: மழைக்காலம் மற்றும் வீட்டைச் சுற்றியுள்ள நீர்நிலைகளில் கொசுக்கள் முட்டையிட்டுப் பெருகுவதைத் தடுப்பதே முதன்மைப் பாதுகாப்பாகும். வீட்டின் அருகிலும் மொட்டை மாடிகளிலும் பயன்படுத்தாத டயர்கள், உடைந்த பாத்திரங்கள் மற்றும் தேங்கிக் கிடக்கும் நன்னீரை உடனுக்குடன் அப்புறப்படுத்த வேண்டும். மேலும், ஜன்னல்களுக்குக் கொசு வலைகளைப் பொருத்துவது, மாலை வேளைகளில் கொசு விரட்டிகளைப் பயன்படுத்துவது மற்றும் உடலை முழுமையாக மூடும் உடைகளை அணிவது கொசுக்கடியிலிருந்து நம்மைக் காக்கும்.
நமது இருப்பிடத்தையும் சுற்றுப்புறத்தையும் தூய்மையாக வைத்துக்கொண்டு, தேங்கும் தண்ணீரை அகற்றுவதே கொசு ஒழிப்பு நாளான இன்று நாம் மேற்கொள்ள வேண்டிய முதன்மை உறுதிய மொழியாகும்.





