உத்தரப் பிரதேச மாநிலம் காசியாபாத் நகரின் முக்கிய வணிகப் பகுதியான ராஜ் நகர் மாவட்ட மையத்தில் இயங்கி வரும் பிரபல தனிஷ்க் நகைக்கடையில் கடந்த ஜூன் 12 ஆம் தேதி அதிகாலையில், சுமார் ரூ.4 கோடி மதிப்பிலான தங்கம், வைரம் மற்றும் நவரத்தினங்கள் பதிக்கப்பட்ட ஆபரணங்கள் மிக மர்மமான முறையில் கொள்ளையடிக்கப்பட்டன. இந்த மெகா கொள்ளை சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த கவி நகர் காவல் நிலைய போலீஸார் மற்றும் ஸ்வாட் சிறப்புப் படையினர் தீவிர விசாரணை மேற்கொண்டதில் பல அதிரடி உண்மைகள் வெளியாகின.
அதே தனிஷ்க் ஷோரூமில் கடந்த ஒன்றரை மாதங்களாகப் பணிபுரிந்து வந்த நிதித் வர்மா என்ற ஊழியரே இந்த கொள்ளைச் சம்பவத்தின் பின்னணியில் இருந்த மாஸ்டர்மைண்ட் என்பது போலீஸாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது. அவரும் அவரது காதலி காஜல் வர்மாவும் தங்களின் ஆடம்பரத் திருமணச் செலவிற்காகப் பணம் திரட்ட இந்த மாஸ்டர் பிளானைத் தீட்டியுள்ளனர். கடையில் உள்ள பாதுகாப்பு குறைபாடுகள் மற்றும் நகைகள் எங்கு வைக்கப்பட்டுள்ளன என்பதைத் துல்லியமாகக் கண்காணித்த நிதித் வர்மா, ஜூன் 11 ஆம் தேதி இரவு சக ஊழியர்களுக்கு ஒரு சிறப்பு விருந்து வைத்துள்ளார். தனக்கும் காஜலுக்கும் திருமணம் நிச்சயமாகிவிட்டதாகக் கூறி, கடையின் முக்கிய சாவிகளைத் தன் வசம் வைத்திருந்த கணக்காளர் கௌதம் ராஜிற்கு அதிகளவில் மது கொடுத்து போதையேற்றியுள்ளார்.
விருந்து முடிந்ததும், போதையில் இருந்த கணக்காளரை வீட்டில் விடுவதாகக் கூறி அழைத்துச் சென்ற நிதித் வர்மா, அவரது பையில் இருந்த கடையின் முதன்மைச் சாவியைத் திருடியுள்ளார். பின்னர், மறுநாள் ஜூன் 12 அதிகாலை 7 மணி அளவில் தனது கூட்டாளியுடன் கடையின் சீருடையை அணிந்து கொண்டு ஷோரூமிற்கு வந்துள்ளார். கடையில் இரவு காவலாளி காலை 7 மணிக்குச் சென்றுவிடுவதையும், பகல் காவலாளி காலை 8 மணிக்கு மேல் வருவதையும் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்ட இந்த கும்பல், சாவியைக் கொண்டு பூட்டைத் திறந்து உள்ளே நுழைந்துள்ளது. தரைத்தளம் மற்றும் இதர தளங்களைத் தொடாமல், மிக அதிக மதிப்புள்ள தங்க மற்றும் வைர நகைகள் வைக்கப்பட்டிருந்த முதல் தளத்தை மட்டும் குறிவைத்து, வெறும் 25 நிமிடங்களில் ரூ.4 கோடி நகைகளை அள்ளிக்கொண்டு தப்பியோடியுள்ளனர்.
கடை திறக்கப்பட்ட போது பூட்டுகள் திறந்திருப்பதைக் கண்டு மேலாளர்கள் அதிர்ச்சியடைந்து போலீஸில் புகார் அளித்ததைத் தொடர்ந்து, சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போது நிதித் வர்மாவின் முகம் அடையாளம் காணப்பட்டது. இதனைத் தொடர்ந்து தொழில்நுட்பக் கண்காணிப்பு மூலம் மறைவிடத்தில் இருந்த முதன்மைக் குற்றவாளி நிதித் வர்மா, அவரது காதலி காஜல் வர்மா மற்றும் கொள்ளையடித்த நகைகளை விற்க உதவியாக இருந்த நிதித்தின் தந்தை சஞ்சய் வர்மா ஆகிய மூவரையும் போலீஸார் கைது செய்தனர். இவர்களிடம் இருந்து ரூ.3.1 கோடி மதிப்புள்ள 2 கிலோ தங்க நகைகள், ரூ.6.5 லட்சம் ரொக்கம் மற்றும் ஒரு துப்பாக்கி பறிமுதல் செய்யப்பட்டுள்ளதுடன், தலைமறைவாக உள்ள மற்ற கூட்டாளிகளைப் பிடிக்க 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டுத் தீவிரத் தேடுதல் வேட்டை நடத்தப்பட்டு வருகிறது.





