Vijay Speech Viral: “அப்பறம் நீங்க எதுக்குங்க சார்?” – அன்று ஸ்டாலினை சாடிய விஜய்! இன்று அவரிடமே கேள்வி!

நாகர்கோவிலில் மாற்றுத்திறனாளி சபரிவர்மன் சிறையில் உயிரிழந்த சம்பவம் தமிழக அரசியலில் பெரும் புயலைக் கிளப்பியுள்ள நிலையில், தவெக தலைவர் ஜோசப் விஜய் கடந்தாண்டு காவல் மரணத்திற்கு எதிராகப் பேசிய பழைய வீடியோ ஒன்று இணையத்தில் அசுர வேகத்தில் வைரலாகி வருகிறது. அன்று எதிர்க்கட்சித் தலைவராகத் திமுக அரசைச் சாடிய விஜய், இன்று முதலமைச்சராக இருக்கும் நிலையில் இந்த விவகாரத்தில் மௌனம் காப்பது ஏன் என்று எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பத் தொடங்கியுள்ளன.

நாகர்கோவிலில் சிறையிலிருந்த மாற்றுத்திறனாளி சபரிவர்மன் அடித்தே கொலை செய்யப்பட்டதாகக் கூறப்படும் நிலையில், அவரது உடலில் 19 இடங்களில் காயங்கள் இருந்ததாகப் பிரேத பரிசோதனை அறிக்கை வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இச்சம்பவம் தொடர்பாக மூன்று காவல் அதிகாரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். இருப்பினும், தவெக தரப்பிலிருந்து அதிகாரப்பூர்வ கருத்துக்கள் எதுவும் இதுவரை வெளியாகவில்லை.

இதற்கிடையில், கடந்தாண்டு ஜூலை 15 ஆம் தேதி தவெக தலைவராக இருந்த ஜோசப் விஜய், கஸ்டடி மரணத்திற்கு எதிராக ஆவேசமாகப் பேசிய வீடியோவை நெட்டிசன்கள் பகிர்ந்து வருகின்றனர். அதில், “எல்லாத்துக்கும் நீதிமன்றம் தலையிட்டு கேள்வி கேட்கணும்னா அப்பறம் நீங்க எதுக்குங்க சார்? நீங்கள் உட்கார்ந்து இருக்கிற அந்த சிஎம் பதவி எதுக்குங்க சார்? இந்த வெற்று விளம்பர சர்க்கார், இப்போ சாரிம்மா சர்க்காராக மாறிடுச்சு” என அன்றைய முதல்வர் மு.க. ஸ்டாலினை நோக்கி விஜய் ஆவேசமாகப் பேசியிருந்தார்.

இதையும் படிக்க தவறாதீர்கள்:  “அதிமுகவிலிருந்து 25 எம்.எல்.ஏ-க்களை வளைச்சது யாரு?” - விஜய் அரசுக்கு திமுக கொடுத்த ஷாக்! உடைபட்ட ரகசிய பேரம்?!

அன்று அப்படிப் பேசிய விஜய், இன்று தனது சொந்த ஆட்சியில் நடந்துள்ள மாற்றுத்திறனாளி மரணத்திற்கு ஒரு இரங்கல் கூட தெரிவிக்காமல் மௌனமாக இருப்பது ஏன் என அதிமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றன. “இதுதான் உங்கள் மாற்றமா?” என அதிமுகவினர் கேள்வி எழுப்ப, “தவறு செய்த அதிகாரிகள் உடனடியாகக் கைது செய்யப்பட்டுள்ளனர், அரசு துரிதமாகச் செயல்படுகிறது” எனத் தவெகவினர் பதிலடி கொடுத்து வருகின்றனர். பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு நிதியுதவியும் அரசு வேலையும் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையும் வலுத்து வருகிறது.