“தவறு வேறு, குற்றம் வேறு!” – புழல் சிறையில் கைதிகளை நேரில் சந்தித்த முதல்வர் விஜய் எடுத்த அதிரடி முடிவு!

சென்னை புழல் மத்திய சிறைச்சாலைக்கு வெள்ளிக்கிழமை திடீர் வருகை தந்த முதலமைச்சர் சி. ஜோசப் விஜய், வழக்கமான நிர்வாக ஆய்வைத் தாண்டிச் சிறைத்துறையின் அணுகுமுறையையே முற்றிலும் மாற்றியமைக்கும் வகையிலான ஒரு மனிதநேயப் பார்வைக்கான அஸ்திவாரத்தை அமைத்துள்ளார். விசாரணை கைதிகள், தண்டனை கைதிகள் மற்றும் பெண்கள் சிறை வளாகங்கள் என அனைத்துப் பிரிவுகளையும் நேரில் பார்வையிட்ட அவர், கைதிகளுக்கான உணவு தயாரிப்புக் கூடம், மருத்துவக் கட்டமைப்பு, நெசவுப் பிரிவு மற்றும் மகாத்மா காந்தி சமூகக் கல்லூரி வகுப்பறைகளை ஆய்வு செய்தார்.

இந்த ஆய்வின்போது சிறை அதிகாரிகளுடன் தீவிரமாக உரையாடிய முதல்வர் விஜய், சிறை நிர்வாகம் என்பது வெறுமனே தண்டனை வழங்கும் இடமாக இருக்கக் கூடாது என்ற மிக முக்கியமான கருத்தைப் பதிவு செய்தார். “இங்குள்ள பெரும்பாலான கைதிகள் தங்களின் வாழ்க்கைச் சூழ்நிலைக் காரணத்தினாலேயே சிறைக்கு வர நேரிடுகிறது” என்று சுட்டிக்காட்டிய அவர், “தெரியாமல் மனித இயல்பால் செய்யப்படும் தவறுக்கும், திட்டமிட்டுச் செய்யப்படும் குற்றத்திற்கும் இடையே பெரிய வித்தியாசம் உள்ளது” என்று அதிகாரிகளிடம் எடுத்துக் கூறினார். சூழ்நிலையால் தவறு செய்தவர்கள் தங்களை உணர்ந்து திருந்துவதற்குச் சிறைச்சாலைகள் வாய்ப்பளிக்கும் மறுவாழ்வு மையங்களாக மாற வேண்டும் என்பதில் அவர் உறுதியாக இருந்தார்.

இதையும் படிக்க தவறாதீர்கள்:  தவெக மாநாட்டில் உயிரிழந்தவர்கள் குடும்பங்களுக்கு அரசு வேலை! "படித்த இளைஞர்கள் நிலை என்ன?"- நெட்டிசன்கள் கடும் கொந்தளிப்பு!

கைதிகளின் தனிப்பட்ட ஆர்வத்திற்கு ஏற்ப அவர்களுக்கு உயர்கல்வி வாய்ப்புகள், தொழிற்பயிற்சிகள் மற்றும் கைவினைப் பயிற்சி வசதிகளைத் தங்கு தடையின்றி செய்து கொடுக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு அவர் நேரடியாக உத்தரவிட்டார். குறிப்பாக, மனித மனங்களை நல்வழிப்படுத்துவதில் புத்தகங்களுக்குப் பெரும் பங்கு உண்டு என்பதால், கைதிகளுக்குத் தேவையான அனைத்து விதமான நூல்களும் கிடைக்கப் பெறுவதையும் சிறை நூலகங்களை விரிவுபடுத்துவதையும் உறுதி செய்யக் கேட்டுக்கொண்டார்.

குற்ற உணர்ச்சியிலும் தனிமையிலும் முடங்கிக் கிடக்கும் மனங்களுக்கு வாசிப்பும் கல்வியும் புதிய நல்வழியைக் காட்டும் எனக் குறிப்பிட்ட முதல்வர், சிறைவாசத்திற்குப் பிறகு அவர்கள் கௌரவமான வாழ்க்கை வாழத் தேவையான தொழிற்பயிற்சிகளுக்கு முன்னுரிமை அளிக்க அறிவுறுத்தினார். சிறைத்துறையின் செயல்பாடுகளை மேம்படுத்த அரசு ஏற்கனவே கூடுதல் உடல் கேமராக்கள் மற்றும் சீருடை தையல் படிகளை வழங்கி உள்ள நிலையில், முதலமைச்சரின் இந்த நேரடி ஆய்வு சிறை நிர்வாகத்தில் ஒரு மைல்கல்லாகப் பார்க்கப்படுகிறது.