சில மனிதர்கள் எவ்வளவு பெரிய உச்சத்தில் இருந்தாலும், சிறைச்சாலைக்குச் சென்றாலும் தங்களது பழைய லீலைகளை விடுவதாக இல்லை போலிருக்கிறது! முன்னாள் பிரதமரின் பேரனும், முன்னாள் எம்.பி-யுமான பிரஜ்வல் ரேவண்ணாவிற்கு வழங்கப்பட்டிருந்த ராஜபோக ‘விஐபி’ சிறை அறை சலுகைகள் அனைத்தும் ஒரே அடியில் காற்றில் பறந்துள்ளன.
தங்கக் கரண்டியோடு பிறந்து, அதிகாரத்தின் உச்சத்தில் இருந்த பிரஜ்வல் ரேவண்ணா, தனது குடும்பத்தின் பண்ணை வீட்டில் வேலை செய்த பெண்ணை இரக்கமில்லாமல் பாலியல் வன்கொடுமை செய்து, அதை மொபைலில் படம்பிடித்து மிரட்டிய வழக்கில் நீதிமன்றத்தால் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுச் சிறையில் தள்ளி வைக்கப்பட்டார். அதுமட்டுமா, ஆயிரக்கணக்கான ஆபாச வீடியோ அடங்கிய பென்டிரைவ்களை ஊர் முழுவதும் பரப்பவிட்டுப் பெரும் வீழ்ச்சியைச் சந்தித்த மனிதர் இவர்.
ஆனால், பெங்களூரு பரப்பன அக்ரஹாரா மத்திய சிறைக்குச் சென்ற பிறகும் இந்த உயர்மட்டக் குற்றவாளிக்கு ராஜமரியாதை குறைந்தபாடில்லை. கடந்த இரண்டு ஆண்டுகளாகச் சாதாரணக் கைதிகளின் துர்நாற்றமும் நெருக்கடியும் படாதவாறு, தனியாக ‘விஐபி’ அறையில் சகல வசதிகளுடன், ஒரு எடுபிடி உதவியாளருடன் சொகுசாகக் காலத்தைக் கழித்து வந்தார்.
அந்தச் ‘சொர்க்கபுரி’ வாழ்க்கை இப்போது சுக்குநூறாக உடைந்துபோயுள்ளது! மத்திய குற்றப்பிரிவு (CCB) அதிகாரிகள் நடத்திய திடீர்ச் சோதனையில், பிரஜ்வல் ரேவண்ணாவின் அறையிலிருந்து 5ஜி ஸ்மார்ட்போன், சார்ஜர் மற்றும் வழக்கம்போல அதே ‘ஆபாச வீடியோக்கள்’ அடங்கிய பென்டிரைவ் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. ஜாமர்கள் பொருத்தப்பட்ட சிறைக்குள், நெட்ஃபிலிக்ஸ், வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம் மற்றும் பிரைம் வீடியோ வரை பார்த்து இவர் செய்த சிறை ‘மறுவாழ்வு’ தற்போது அம்பலமாகியுள்ளது.
இதன் விளைவாக, பிரஜ்வலின் விஐபி பட்டா பறிக்கப்பட்டு, 20 சாதாரணக் கைதிகள் அடைபட்டுள்ள பொது அறைக்குத் தூக்கி வீசப்பட்டுள்ளார். இனிமேல் தனி கழிப்பறை கிடையாது; 20 பேருடன் ஒரே கழிப்பறையைப் பகிர்ந்துகொள்ள வேண்டும், சிறைத்துறை கொடுக்கும் சட்டையைக் போட்டுக்கொண்டு சிறை நூலகத்தில் வேலை செய்ய வேண்டும் என அதிகாரிகள் மூக்குடைத்துள்ளனர்.
இவருக்கு உடந்தையாக இருந்த உதவிச் சிறைக் கண்காணிப்பாளர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். “கான்ஸ்டபிள் முதல் ஐபிஎஸ் அதிகாரி வரை யாராக இருந்தாலும் தூக்கி அடிப்போம்” என உள்துறை அமைச்சர் பிரியாங்க் கார்கே கொந்தளித்துள்ளார். அதிகாரச் செருக்காலும், காம வெறியாலும் வாழ்க்கையைத் தொலைத்த ஒரு அரசியல் வாரிசு, இப்போது சிறை கழிப்பறை வரிசையில் நிற்கும் நிலைக்கு வந்துள்ளது காலத்தின் விசித்திரமான நீதி தான்!





