மெட்ரோ ரயிலில் முதல்வர் விஜய் சர்ப்ரைஸ் ஆய்வு: பொதுமக்களுடன் செல்ஃபி… தோளில் சாய்ந்த பெண்மணி!

சென்னை மெட்ரோ ரயிலில் திடீரென பயணித்த முதல்வர் ஜோசப் விஜய், பயணிகளுடன் உரையாடி சர்ப்ரைஸ் ஆய்வு மேற்கொண்டார். அப்போது ஆர்வத்துடன் பயணி ஒருவர் முதலமைச்சரின் தோளில் சாய்ந்து செல்ஃபி எடுத்த நெகிழ்ச்சியான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

மக்களின் இந்த அன்பான அணுகுமுறைக்கு முதலமைச்சர் விஜய் புன்னகையுடனும் இன்முகத்துடனும் பதிலளித்து, பயணிகளின் கோரிக்கைகள் மற்றும் மெட்ரோ பயண அனுபவங்கள் குறித்துக் கேட்டறிந்தார்.

ஆய்வின் தொடக்கமாக, சென்னை ஓமந்தூரார் அரசு தோட்டப் பகுதியில் அமைந்துள்ள மெட்ரோ ரயில் நிலையத்திற்கு வருகை தந்த முதலமைச்சர் ஜோசப் விஜய், அங்கிருந்து புறப்பட்ட மெட்ரோ ரயிலில் ஏறிப் பயணித்தார். சாதாரணப் பயணிகளைப் போலவே ரயிலில் ஏறிய முதலமைச்சர், அங்கு அமைக்கப்பட்டிருந்த இருக்கையில் அமர்ந்து நந்தனம் மெட்ரோ ரயில் நிலையம் வரை தொடர்ந்து பயணித்தார். முதலமைச்சர் தங்களோடு ஒரே ரயிலில் பயணிப்பதைக் கண்ட பயணிகள் மிகுந்த உற்சாகமடைந்து அவருடன் கலந்துரையாடினர்.

நந்தனம் மெட்ரோ ரயில் நிலையத்தைச் சென்றடைந்த முதலமைச்சர், அங்குள்ள மெட்ரோ ரயில் தலைமை அலுவலகத்திற்குச் சென்று கட்டுப்பாட்டு அறையில் விரிவான ஆய்வை மேற்கொண்டார். மெட்ரோ ரயில்கள் எவ்வாறு இயங்குகின்றன, அவற்றின் நேர மேலாண்மை மற்றும் பயணிகளின் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். சென்னை நகரம் முழுவதும் தற்போது இயங்கி வரும் மெட்ரோ வழித்தடங்கள் மற்றும் எதிர்காலத்தில் விரிவாக்கம் செய்யப்படவுள்ள வழித்தடங்கள் அடங்கிய வரைபடத்தைக் காட்டி அதிகாரிகள் முதலமைச்சருக்கு விரிவாக விளக்கமளித்தனர்.

இதையும் படிக்க தவறாதீர்கள்:  "அவதூறு வழக்கில் சிக்கும் உதயநிதி அளித்த ஒழுக்க பாடம்!" - விஜய்யிடம் மன்னிப்பு கேட்ட திமுக எம்.எல்.ஏ!

அதனைத் தொடர்ந்து, சென்னை கத்திப்பாராவில் நடைபெற்று வரும் மெட்ரோ ரயில் கட்டமைப்புப் பணிகளையும் முதலமைச்சர் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். பணிகளை விரைவாகவும் தரமாகவும் முடித்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்று அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

இந்த ஆய்வுகளின் தொடர்ச்சியாக, ஓட்டுநர் இல்லாத தானியங்கி மெட்ரோ ரயில்கள் இயக்கப்படவுள்ள போரூர் முதல் பூந்தமல்லி வரையிலான வழித்தடப் பணிகளைப் பார்வையிடுவதற்காக முதலமைச்சர் விஜய் போரூர் பகுதிக்குச் சென்றார். அங்கு அமையவுள்ள நவீன கட்டமைப்பு மற்றும் ஓட்டுநரில்லா ரயில் இயக்கத்திற்கான முன்னேற்பாடுகள் குறித்து முதலமைச்சர் நேரில் ஆய்வு செய்து, திட்டத்தை விரைந்து முடிப்பதற்கான வழிகாட்டுதல்களை வழங்கினார்.