“கம்பீரமாக கட்சி தொடங்கியவர்கள் எல்லாம் இன்று அறிவாலயத்திலும் கோபாலபுரத்திலும் அடைக்கலம்!” “எங்கள் தலைவர் விஜய் காலடியில் வைகோ!” விழுப்புரம் மேடையில் நாஞ்சில் சம்பத் அதிரடி உரை!

விழுப்புரத்தில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய பிரபல பேச்சாளர் நாஞ்சில் சம்பத், தமிழகத்தின் முக்கிய அரசியல் கட்சித் தலைவர்களை மிகக் கடுமையாக விமர்சித்து அதிரடியாக உரையாற்றினார். மேடையில் ஆவேசமாகப் பேசிய அவர், தவெக தலைவர் விஜய்யின் அரசியல் வருகை மற்ற தமிழகக் கட்சிகளின் தலைவர்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளதாகக் குறிப்பிட்டார்.

தனது பேச்சில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோவைச் சாடிய நாஞ்சில் சம்பத், “பெரிய லட்சியங்களோடு மதிமுகவைத் தொடங்கிய வைகோ, இன்று எங்கள் தலைவர் விஜய் காலடியில் வந்து விழுந்து கிடக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார்” என்று விமர்சித்தார். தொடர்ந்து பேசிய அவர், “அரசியல் மாற்றம் தருவதாகக் கூறி மக்கள் நீதி மய்யம் தொடங்கிய கமல்ஹாசன், தனது டார்ச் லைட்டை அறிவாலயத்தில் தேடிக் கொண்டிருக்கிறார். அதேபோல், விஜயகாந்த் உருவாக்கிய தேமுதிகவை அவரது மனைவி பிரேமலதா திமுகவிடம் குத்தகைக்கு விட்டுவிட்டார். ஜி.கே.வாசனின் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியோ இன்று முற்றிலும் கல்லறைக்குப் போய்விட்டது” என்று அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.

மாற்று அரசியலை முன்வைத்து களம் இறங்கிய தலைவர்கள் அனைவரும் இன்று தங்கள் கொள்கைகளை விட்டுக்கொடுத்து ஆளுங்கட்சியின் நிழலில் அடைக்கலம் புகுந்துள்ளதாகச் சாடிய அவர், தமிழக மக்கள் உண்மையான மாற்றத்தை வழங்கக் கூடிய ஒரே தலைவராகத் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்யை மட்டுமே பார்க்கிறார்கள் எனத் தனது உரையில் மிக உறுதியாகத் தெரிவித்தார்.