“மணிக்கு 10 கி.மீ வேகம்.. ‘சைய்யா சைய்யா’ பாடல் ஷூட்டிங் வரை!” – நீலகிரி மலை ரயிலின் மறைக்கப்பட்ட சுவாரஸ்யங்கள்!

இந்தியாவில் அதிவேகமாகச் செல்லும் வந்தே பாரத் மற்றும் புல்லட் ரயில் திட்டங்கள் குறித்துப் பரபரப்பாகப் பேசப்படும் இந்தக் காலத்தில், மணிக்கு வெறும் 10 கி.மீ வேகத்தில் இயங்கும் ஒரு ரயில் உலகளவில் கோடிக்கணக்கான சுற்றுலாப் பயணிகளைக் கவர்ந்து வருகிறது. அதுதான் தமிழ்நாட்டின் பெருமையான நீலகிரி மலை ரயில். 46 கிலோமீட்டர் தூரத்தைக் கடக்க சுமார் 5 மணி நேரம் எடுத்துக்கொள்ளும் இந்த ரயில் தான் இந்தியாவின் மிக மெதுவான ரயிலாகும். ஆனால், இந்த மெதுவான பயணத்தின் பின்னால் 120 ஆண்டுகால வரலாற்றுச் சுவாரஸ்யங்களும், பிரமிப்பூட்டும் பொறியியல் அற்புதங்களும் ஒளிந்துள்ளன.

ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில், நீலகிரியின் குளிர்ந்த காலநிலையை அனுபவிக்கவும், தேயிலை மற்றும் காபி கொட்டைகளைச் சமவெளிப் பகுதிகளுக்குக் கொண்டு வரவும் மலை ரயில் பாதை அமைக்க முடிவு செய்யப்பட்டது. இதற்கான முதல் வரைவுத் திட்டம் 1854-ஆம் ஆண்டிலேயே தயாரிக்கப்பட்டது. இருப்பினும், கடினமான மலைப்பாதை மற்றும் அன்றைய அதிகாரிகளின் தொடர் தாமதங்களால், இத்திட்டம் முடிவுக்கு வர சுமார் 45 ஆண்டுகள் ஆகின. இறுதியாக 1899-ல் மேட்டுப்பாளையம் முதல் குன்னூர் வரையிலும், பின்னர் 1908-ல் ஊட்டி வரையிலும் ரயில் பாதை முழுமையாக நீட்டிக்கப்பட்டது.

கடல் மட்டத்திலிருந்து 330 மீட்டர் உயரத்தில் உள்ள மேட்டுப்பாளையத்தில் தொடங்கி 2,200 மீட்டர் உயரத்தில் உள்ள ஊட்டி வரை இந்த ரயில் பயணிக்கிறது. இதில் குன்னூர் வரையிலான பாதை 8.33% சாய்வு கோணம் கொண்டது. இதுதான் ஆசியாவிலேயே மிகச் செங்குத்தான ரயில் பாதையாகும். இவ்வளவு கடுமையான மலைச்சரிவில் ரயில் பின்னோக்கிச் சரிந்துவிடாமல் இருக்க, சுவிட்சர்லாந்து நாட்டின் ‘ஸ்விஸ் ரிகன்பாக்’ வடிவமைப்பிலான பற்சக்கர இருப்புப்பாதை (Rack and Pinion) தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுகிறது. தண்டவாளத்தின் நடுவே இருக்கும் பற்சக்கரத்தில் ரயிலின் இன்ஜின் பல்வரிசை கச்சிதமாகப் பொருந்தி ரயிலை மேலே இழுத்துச் செல்கிறது. இந்தியாவிலேயே இந்தச் சிறப்புத் தொழில்நுட்பம் பயன்பாட்டில் இருக்கும் ஒரே ரயில் இதுமட்டுமே ஆகும்.

இதையும் படிக்க தவறாதீர்கள்:  [ட்ரோல்களுக்கு மகேந்திரன் பதில்]: "சோலார் சிஸ்டம்னு சொன்னது என் தப்புதான்; மக்கள் மனசு கஷ்டப்பட்டிருந்தா மன்னிச்சிடுங்க!" உடைந்து போய் மாஸ்டர் மகேந்திரன் வெளியிட்ட உருக்கமான வீடியோ!

இந்த 46 கி.மீ பயணத்தின் போது ரயில் 16 குகைகள், 250-க்கும் மேற்பட்ட பாலங்கள் மற்றும் 208 கூர்மையான வளைவுகளைக் கடந்து செல்கிறது. மலைப்பாதையில் மேலே ஏறும் போது 5 மணி நேரம் ஆகும் பயணம், மலையிலிருந்து கீழே மேட்டுப்பாளையம் இறங்கும் போது புவிஈர்ப்பு விசையின் காரணமாக 3.5 மணி நேரத்திலேயே முடிந்துவிடும். பயணத்தின் இடையே கல்லாறு மற்றும் ஹில்குரோவ் ஆகிய இடங்களில் நீராவிக்காகத் தண்ணீரை நிரப்பும் காட்சியைப் பயணிகள் இன்றும் நேரலையாகக் காண முடியும்.

இயற்கை எழில் கொஞ்சும் இந்த ரயில் பாதை திரை உலகினரையும் விட்டுவைக்கவில்லை. மணிரத்னம் இயக்கத்தில் ஷாருக்கான் நடித்த ‘தில் சே’ படத்தில் இடம்பெற்ற உலகப்புகழ்பெற்ற ‘சைய்யா சைய்யா’ பாடல் இந்த நீலகிரி ரயிலின் கூரை மீது தான் படமாக்கப்பட்டது. அதேபோல், கமலஹாசன் – ஸ்ரீதேவி நடித்த ‘மூன்றாம் பிறை’ படத்தின் உணர்ச்சிப்பூர்வமான கிளைமாக்ஸ் காட்சி லவ்டேல் ரயில் நிலையத்தில் தான் படமாக்கப்பட்டது. நூற்றாண்டைக் கடந்த பழமையும், ஈடு இணையற்ற பொறியியல் நுட்பமும் கொண்ட இந்த நீலகிரி மலை ரயிலுக்குக் கடந்த 2005-ஆம் ஆண்டு யுனெஸ்கோ உலக பாரம்பரியச் சின்ன அங்கீகாரத்தை வழங்கி கௌரவித்தது குறிப்பிடத்தக்கது.