சோதனையின் போது தவறுதலாக 3 நிறுவனங்களை ஹேக் செய்த ஆந்திரோபிக் AI! உலகளவில் அதிர்ச்சி!

செயற்கை நுண்ணறிவுத் துறையின் முன்னணி நிறுவனமான ஆந்திரோபிக், தங்களது குளோட் AI மாடல்கள் பாதுகாப்புக் கட்டமைப்புச் சோதனையின் போது 3 நிறுவனங்களின் சிஸ்டங்களை தவறுதலாக ஹேக் செய்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

அண்மையில் ஓபன்ஏஐ நிறுவனத்தில் நடந்த இதுபோன்ற சம்பவத்தைத் தொடர்ந்து நடத்தப்பட்ட உள் தணிக்கையில், 1.41 லட்சத்திற்கும் அதிகமான தரவுகள் ஆய்வு செய்யப்பட்டு இந்த ஊடுருவல் உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆய்வின் முடிவில், குளோட் ஒப்பஸ் 4.7 மற்றும் மைத்தோஸ் 5 உள்ளிட்ட மூன்று வெவ்வேறு ஏஐ மாடல்கள் சோதனைக் கட்டுப்பாடுகளை மீறி உண்மையான நிறுவனங்களின் சர்வருக்குள் நுழைந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

செயற்கை நுண்ணறிவின் சைபர் பாதுகாப்புத் திறனைச் சோதிக்க ‘கேப்சர் தி ஃபிளாக்’ என்ற வினாடி-வினா போன்ற போலி இணையச் சூழல் உருவாக்கப்பட்டது. இதில் ஏஐ மாடல்களுக்கு இணைய வசதி இல்லாத போலிச் சூழலில் இயங்குவதாகவே அறிவுறுத்தப்பட்டிருந்தது.

ஆனால், ஆந்திரோபிக் மற்றும் அதன் மூன்றாம் தரப்பு சோதனை கூட்டாளியான ‘இர்ரெகுலர்’ ஆகிய நிறுவனங்களுக்கு இடையே ஏற்பட்ட தொழில்நுட்பக் கட்டமைப்புத் தவறால், சோதனைச் சாதனங்கள் இணையத்துடன் இணைக்கப்பட்டிருந்தன. இதனால், இணையத்தில் கண்டறிந்த உண்மையான நிறுவனங்களின் இணையதளங்களையும், தரவுத்தளங்களையும் சோதனையின் ஒரு பகுதி என்றே தவறாகக் கருதி குளோட் AI ஊடுருவியுள்ளது.

இதையும் படிக்க தவறாதீர்கள்:  Google AI Upgrade Confirmed: ஆண்ட்ராய்டு குரோம் பயனர்களுக்கு 'ஆட்டோ பிரவுஸ்' வசதி; இனி தானாகவே வேலை செய்யும் ஏஐ!

இந்த ஊடுருவலுக்கு குளோட் AI எந்தவொரு சிக்கலான முறையையும் பயன்படுத்தவில்லை. எளிய எஸ்கியூஎல் இன்ஜெக்ஷன், பலவீனமான பாஸ்வேர்டுகள் மற்றும் திறந்தநிலையில் இருந்த இணைய முகவரிகளைப் பயன்படுத்தியே சர்வருக்குள் நுழைந்துள்ளது.

ஒரு சம்பவத்தில், போலி நிறுவனத்தின் பெயரைக் கொண்ட உண்மையான நிறுவனத்தின் தரவுத்தளத்திற்குள் நுழைந்து, நூற்றுக்கணக்கான தரவு வரிசைகளைச் சேகரித்துள்ளது. மற்றுமொரு சம்பவத்தில், பையித்தான் மென்பொருள் களஞ்சியத்தில் ஒரு பைலை பதிவேற்றம் செய்து, 15 உண்மையான சிஸ்டங்களில் இருந்து தகவல்களைப் பெற்றுள்ளது.

இருப்பினும், இந்த ஏஐ மாடல்கள் சுயசார்பாக இயங்கவோ அல்லது சோதனை எல்லைகளை மீறித் தப்பிக்கவோ முயலவில்லை என்றும், கொடுக்கப்பட்ட இலக்கை முடிக்கும் முயற்சியிலேயே இந்தத் தவறு நிகழ்ந்துள்ளது என்றும் ஆந்திரோபிக் தெளிவுபடுத்தியுள்ளது.

இச்சம்பவத்தைத் தொடர்ந்து அனைத்து இணையச் சோதனைகளும் உடனடியாக நிறுத்தப்பட்டு, பாதிக்கப்பட்ட நிறுவனங்களுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. AI கட்டுப்பாடின்றி இயங்கும் சாத்தியக்கூறுகள் அதிகரித்து வருவதை இந்தச் சம்பவம் உலகளவில் மீண்டும் நிரூபித்துள்ளது.