வாட்ஸ்அப்பில் போன் நம்பர் இல்லாம சாட் பண்ணலாம்… ஆனா உங்க உயிருக்கே ஆபத்து! மெட்டா நிறுவனத்தை அலறவிட்ட மத்திய அரசு!

உலக அளவில் கோடிக்கணக்கான மக்களால் பயன்படுத்தப்படும் வாட்ஸ்அப் (WhatsApp) செயலியில், பயனர்களின் தனியுரிமையைப் பாதுகாப்பதற்காக ‘யூசர்நேம்’ (Usernames) என்ற புதிய அம்சம் அறிமுகப்படுத்தப்பட இருந்தது. இதன் மூலம் பயனர்கள் தங்களின் மொபைல் எண்களைக் காட்டாமலேயே மற்றவர்களுடன் சாட் செய்ய முடியும். ஆனால், இந்த புதிய அம்சம் இந்தியாவில் ஆன்லைன் மோசடிகள் மற்றும் சைபர் குற்றங்களை விஸ்வரூபம் எடுக்க வைக்கும் என மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் (MeitY) கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளதுடன், இந்த அம்சத்தை இந்தியாவில் அறிமுகப்படுத்த தற்காலிகத் தடையும் விதித்துள்ளது.

இது தொடர்பாக மெட்டா (Meta) நிறுவனத்திற்கு மத்திய அரசு அனுப்பியுள்ள அதிரடி நோட்டீஸில், இந்த யூசர்நேம் அம்சம் குறித்து இன்னும் 3 நாட்களுக்குள் விரிவான விளக்கத்தை அளிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், அரசின் முழுமையான ஒப்புதல் மற்றும் ஆலோசனைகள் முடியும் வரை இந்த அம்சத்தை இந்தியாவில் எக்காரணம் கொண்டும் பயன்பாட்டிற்குப் கொண்டு வரக் கூடாது என்றும் மத்திய அரசு திட்டவட்டமாகக் கூறியுள்ளது.

ஆன்லைன் மோசடிகள் அதிகரிக்க வாய்ப்பு

மத்திய அரசின் இந்த அதிரடி நடவடிக்கைக்குப் பின்னணியில் பல அதிர்ச்சியூட்டும் காரணங்கள் உள்ளன. வாட்ஸ்அப்பின் இந்த புதிய வசதியைப் பயன்படுத்தி சைபர் குற்றவாளிகள், போலி கணக்குகளை உருவாக்கிப் பொதுமக்களை எளிதாக ஏமாற்ற முடியும் என அரசு அஞ்சுகிறது. குறிப்பாக, அரசு அதிகாரிகள், வங்கிகள், பிரபலங்கள் மற்றும் அரசு நிறுவனங்களின் பெயர்களைப் போன்றே போலி யூசர்நேம்களை (Identity Spoofing) உருவாக்கி, ‘டிஜிட்டல் அரெஸ்ட்’ (Digital Arrest) போன்ற பயங்கரமான ஆன்லைன் மோசடிகளிலும், பணப் பறிப்பிலும் ஈடுபட அதிக வாய்ப்புகள் உள்ளதாக டெல்லி போலீஸ் மற்றும் தொலைத்தொடர்புத் துறை (DoT) எச்சரித்துள்ளது.

இதையும் படிக்க தவறாதீர்கள்:  மாணவர்களுக்கு ஜாக்பாட்! 1 ஆண்டுக்கு அட்வான்ஸ்டு 'Gemini AI' பிளான் இலவசம்... கூகுளின் அதிரடி அறிவிப்பு!

மொபைல் எண் இல்லாமல் யூசர்நேம் மட்டுமே இருந்தால், குற்றவாளிகள் இந்தியாவில் இருக்கிறார்களா அல்லது வெளிநாட்டில் இருக்கிறார்களா என்பதைக் கண்டறிவது புலனாய்வு அமைப்புகளுக்கு (LEAs) மிகப்பெரிய சவாலாக மாறும் என அதிகாரிகள் கவலை தெரிவித்துள்ளனர்.

மெட்டா நிறுவனத்தின் விளக்கம்

மத்திய அரசின் இந்த நோட்டீஸைத் தொடர்ந்து வாட்ஸ்அப் தரப்பில் ஒரு விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. அதில், “இந்த அம்சம் தற்பொழுது முன்பதிவு மட்டத்தில் மட்டுமே உள்ளது, இன்னும் முழுமையாக நேரலைக்கு வரவில்லை. போலி கணக்குகளைத் தடுக்க அரசு அமைப்புகள், பிரபலங்கள் மற்றும் முக்கியப் பிரமுகர்களின் பெயர்களைப் போலி நபர்கள் பயன்படுத்த முடியாதவாறு ஏற்கனவே ‘ரிசர்வ்’ (Reserve) செய்து வைத்துள்ளோம். மேலும், ஒரு யூசர்நேம் கணக்கில் இருந்து எத்தனை புதிய நபர்களைத் தொடர்பு கொள்ளலாம் என்ற கட்டுப்பாடு மற்றும் பல அடுக்கு பாதுகாப்பு அம்சங்களை உருவாக்கியுள்ளோம்” என்று தெரிவித்துள்ளது. இருப்பினும், தேசிய பாதுகாப்பு மற்றும் பொதுமக்கள் நலனில் சமரசம் செய்ய முடியாது என்பதில் மத்திய அரசு உறுதியாக உள்ளது.