மேற்கு ஆசியப் போர்… எகிறிய கட்டுமானச் செலவு! வீடு வாங்குவோருக்கு ஷாக் கொடுத்த 4 மாத அவகாசம்!

மேற்கு ஆசியாவில் பிப்ரவரி இறுதியில் வெடித்துள்ள போர், இந்திய ரியல் எஸ்டேட் துறையிலும், வீடு வாங்கக் காத்திருக்கும் நடுத்தர மக்களின் கனவுகளிலும்தான் மிகப்பெரிய அதிர்வை ஏற்படுத்தியிருக்கிறது! போர் நடப்பது எங்கோ தூரத்து தேசத்தில் தானே, அதற்கும் இந்தியாவில் ஒரு பிளாட் கட்டுவதற்கும் என்ன சம்பந்தம் என்று கேட்டால், அதன் பின்னணியில் உள்ள பொருளாதாரக் கணக்குகள் மலைக்க வைக்கின்றன.

போர் தீவிரமடைந்ததைத் தொடர்ந்து, கச்சா எண்ணெய் விலை ஏற்றம், கடல்வழி சரக்குப் போக்குவரத்தின் கட்டண உயர்வு மற்றும் டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி என மூன்று முக்கியக் காரணிகள் இந்தியக் கட்டுமானத் துறையை நேரடியாகப் பாதித்துள்ளன. இதன் விளைவாக, இந்தியாவில் கட்டப்பட்டு வரும் ரியல் எஸ்டேட் திட்டங்களின் செலவு 30% முதல் 60% வரை உயர்ந்துள்ளதாக கிரெடாய் (Credai) அமைப்பு கவலை தெரிவித்துள்ளது. போருக்கு முன்பாக ₹240-க்கு விற்ற ஒரு மூட்டை சிமெண்ட் ₹300 ஆகவும், ₹50,000-க்கு விற்ற ஒரு டன் ஸ்டீல் ₹70,000 ஆகவும் உயர்ந்திருப்பதே இதற்கு சாட்சி!

இந்தியாவில் தயாரிக்கும் சிமெண்ட் மற்றும் ஸ்டீலுக்கு எதற்குப் போர் காரணமாக அமைந்தது? காரணம் எளிமையானது. இந்த உற்பத்தி ஆலைகளை இயக்கத் தேவையான நிலக்கரி, இயற்கை எரிவாயு மற்றும் எரிபொருட்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. மேலும், உற்பத்தி செய்யப்பட்ட பொருட்களை நாடு முழுதும் கொண்டு சேர்க்கும் டீசல் விலையும் அதிகரித்துள்ளது. இது தவிர, வீடுகளுக்குப் பயன்படுத்தப்படும் வாட்டர்ப்ரூஃபிங் கெமிக்கல்கள், பிவிசி பைப் (PVC Pipes), பெயிண்ட்கள் போன்ற அனைத்தும் பெட்ரோலியம் சார்ந்த பொருட்கள் என்பதால் அவற்றின் விலையும் எகிறியுள்ளது.

இதையும் படிக்க தவறாதீர்கள்:  "உங்கள் கம்பெனியில் ஒரு பொண்ணு கூட இல்லையா?": ஒற்றை ஈமெயில் அனுப்பி செம ட்விஸ்ட் அடித்த 24 வயது பெண்!

மற்றொரு பக்கம், ஐரோப்பாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் டைல்ஸ்கள், லிஃப்ட் உபகரணங்கள் மற்றும் கிளாஸ் ஃபிரேம்கள் ஆகியவை செங்கடல் மற்றும் சூயஸ் கால்வாய் வழியிலேயே இந்தியா வருகின்றன. அங்கு நடக்கும் தாக்குதல்கள் காரணமாக, சரக்குக் கப்பல்கள் ஆப்பிரிக்காவைச் சுற்றி சுற்றிக்கொண்டு வர வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் கடல்வழிச் செலவுகளும், காப்பீட்டுக் கட்டணங்களும் கடுமையாக உயர்ந்துள்ளன.

இந்த திடீர் விலை உயர்வாலும், மூலப்பொருட்கள் தட்டுப்பாட்டாலும் கட்டுமானப் பணிகள் தாமதமடைந்துள்ளதை உணர்ந்த மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சகம், ஜூலை 31 அன்று ஒரு முக்கிய வழிகாட்டுதலை வெளியிட்டது. அதன்படி, அனைத்து மாநில ‘ரேரா’ (RERA) அமைப்புகளும், பில்டர்கள் தங்கள் திட்டங்களைப் பதிவு செய்யவும், முடித்து ஒப்படைக்கவும் கூடுதலாக 4 மாதங்கள் அவகாசம் அளிக்கலாம் என்று அறிவுறுத்தியுள்ளது.

இந்தியாவின் முன்னணி 7 நகரங்களில் மட்டும் இந்த 2026-ஆம் ஆண்டில் சுமார் 5.4 லட்சம் வீடுகள் கட்டி முடிக்கப்பட்டு உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்பட வேண்டிய இலக்கு உள்ளது. இதில் மும்பை மற்றும் புனே நகரங்கள் மட்டுமே 57 சதவீதப் பங்கைக் கொண்டுள்ளன. சென்னையிலும் சுமார் 35,600 வீடுகள் ஒப்படைக்கப்பட வேண்டிய வரிசையில் உள்ளன. 2020 பெருந்தொற்று காலத்தில் வழங்கப்பட்ட அவகாசத்தைப் போல, தற்போது ‘ஃபோர்ஸ் மெஜூர்’ (Force Majeure – தவிர்க்க முடியாத பேரிடர்) விதியின் கீழ் இந்த 4 மாத அவகாசம் வழங்கப்பட்டுள்ளது பில்டர்களுக்குப் பெரும் நிவாரணத்தைக் கொடுத்துள்ளது. ஆனால், வீட்டின் சாவிக்காகக் காத்திருக்கும் வாடிக்கையாளர்களுக்கு இந்த தாமதம் சற்று ஏமாற்றத்தையே அளித்துள்ளது.