ஓய்வூதியப் பணத்தை எங்கே முதலீடு செய்வது? நிபுணர்கள் வழங்கும் முக்கிய வழிகாட்டல்!

பணி ஓய்வு பெற்ற பிறகு கையில் சேரும் பெரிய தொகையை எங்கு முதலீடு செய்வது என்பது பல மூத்த குடிமக்களுக்குப் பெரும் குழப்பமாக அமைகிறது. ஓய்வுக்குப் பிந்தைய வாழ்க்கையை மேலும் 20 முதல் 30 ஆண்டுகள் வரை சுமூகமாகக் கடக்க திட்டமிடல் அவசியமாகிறது. பங்குச்சந்தை, ரியல் எஸ்டேட், வங்கி ஃபிக்ஸட் டெபாசிட்கள், தங்கம் மற்றும் பரஸ்பர நிதிகள் (Mutual Funds) எனப் பல வழிகள் இருந்தாலும், அதிக லாபத்திற்கு ஆசைப்பட்டு ஆபத்தான திட்டங்களில் பணத்தை இழக்காமல் இருப்பதே மூத்த குடிமக்களின் முதன்மையான இலக்காக இருக்க வேண்டும்.

வயது முதிர்ந்த காலத்தில் அதிக லாபம் தரும் திட்டங்களைத் தேடி ஓடுவதை விட, முதலீடு செய்த மூலதனத்தின் பாதுகாப்பு, தடங்கலற்ற தொடர் வருமானம் மற்றும் மன அமைதி ஆகியவையே மிக முக்கியம் என நிதி நிபுணர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். இந்த வயதில் தவறான வழிகாட்டல்கள் அல்லது கமிஷன் அடிப்படையிலான விற்பனை வலையில் வீழ்ந்துவிடக் கூடாது. அதிக லாபம் தருவதாகக் கூறும் கவர்ச்சிகரமான வாக்குறுதிகளை நம்பி அவசரப்பட்டு எந்தவொரு ஆவணத்திலும் கையொப்பமிடக் கூடாது. எந்தவொரு திட்டத்திலும் முதலீடு செய்யும் முன், குடும்ப உறுப்பினர்களுடனோ அல்லது நம்பகமான நிதி ஆலோசகருடனோ விரிவாகக் கலந்தாலோசிப்பது பாதுகாப்பானது.

இதையும் படிக்க தவறாதீர்கள்:  "டிரம்ப் போடும் போஸ்ட்டை விற்கலாமா?" - அதிபர் அறிவிப்பில் வியாபாரம்: கொந்தளிக்கும் வால் ஸ்ட்ரீட்!

பங்குச்சந்தையில் பல வருட அனுபவமும் சந்தை மாற்றங்கள் பற்றிய புரிதலும் இல்லாத பட்சத்தில், மூத்த குடிமக்கள் நேரடியாகப் பங்குகளில் முதலீடு செய்வதைத் தவிர்க்க வேண்டும். கடந்த காலத்தில் ஒரு பங்கோ அல்லது பரஸ்பர நிதியோ அதிக லாபம் தந்தது என்பதற்காக, எதிர்காலத்திலும் அதுவே நடக்கும் என்று நம்பி ரிஸ்க் எடுப்பது ஆபத்தானது. இது சில சமயங்களில் அசலையே இழக்கும் அபாயத்தை ஏற்படுத்தக்கூடும். நமக்கு நன்கு புரிந்த மற்றும் பரிச்சயமான நிதிப் தயாரிப்புகளில் மட்டுமே முதலீடு செய்ய வேண்டும்.

வயது அதிகரிக்கும் போது மருத்துவச் செலவுகள் எதிர்பாராமல் அதிகரிக்கக்கூடும் என்பதால், சுகாதாரக் காப்பீட்டை (Health Insurance) எக்காரணம் கொண்டும் கைவிடக் கூடாது. வயதான காலத்தில் பிரீமியம் அதிகம் என்ற காரணத்திற்காகக் காப்பீட்டை நிறுத்துவது பெரும் பொருளாதார நெருக்கடியை உருவாக்கும். அதேபோல், அவசர தேவைகளுக்கு 24 முதல் 48 மணி நேரத்திற்குள் எடுக்கும் வகையில் பணத்தை லிக்விட் (Liquid) வடிவில் வைத்திருக்க வேண்டும். மொத்தப் பணத்தையும் நீண்ட காலத்திற்கு லாக் செய்யும் திட்டங்களில் முதலீடு செய்யக் கூடாது.

ரியல் எஸ்டேட் துறையைப் பொறுத்தவரை, 60 வயதிற்குப் பிறகு அதில் பெரிய அளவில் பணத்தை முதலீடு செய்வதைத் தவிர்க்குமாறு நிபுணர்கள் அறிவுறுத்துகின்றனர். ஏனெனில், நிலம் அல்லது வீட்டை உடனடியாக விற்றுப் பணமாக மாற்றுவது மிகவும் கடினம். அவசரத் தேவையின் போது சொந்தப் பணத்தையே பயன்படுத்த முடியாத நிலை இதனால் ஏற்படலாம். ரியல் எஸ்டேட் மூலம் வருமானம் ஈட்ட விரும்பினால், ஆர்.ஈ.ஐ.டி (REITs) போன்ற மாற்று வழிகளை யோசிக்கலாம்.

இதையும் படிக்க தவறாதீர்கள்:  Have a Savings Account? Here is a Good News for You! எஸ்பிஐ, எச்டிஎஃப்சி-யை விட அதிக வட்டி தரும் வங்கிகள் இவைதான்! உங்கள் பணத்திற்கு லாபம் பார்க்க ஒரு எளிய வழி!

முடிவாக, எந்த வயதாக இருந்தாலும் முதலீட்டில் பன்முகத்தன்மை (Diversification) மிகவும் அவசியம். மொத்தப் பணத்தையும் ஒரே இடத்தில் முதலீடு செய்யாமல் வங்கி டெபாசிட்கள், தங்கம், பாண்டுகள் மற்றும் குறைந்த ரிஸ்க் கொண்ட மியூச்சுவல் ஃபண்டுகள் போன்றவற்றில் பிரித்து முதலீடு செய்ய வேண்டும். மியூச்சுவல் ஃபண்டுகளில் ‘சிஸ்டமேடிக் வித்ட்ராயல் பிளான்’ (SWP) முறையைப் பயன்படுத்துவதன் மூலம் மாதந்தோறும் நிலையான வருமானத்தைப் பெற முடியும்.