வாால்மார்ட் நிறுவனத்தின் பிளிப்கார்ட் தனது புதிய உணவு விநியோக சேவையை பெங்களூருவில் ஆகஸ்ட் 15 முதல் தொடங்க தீவிரமாக ஆயத்தமாகி வருகிறது. இதற்காக நகரில் உள்ள பல்வேறு உணவகங்களை தனது தளத்தில் இணைக்கும் பணிகளை அந்நிறுவனம் ஏற்கனவே வேகப்படுத்தியுள்ளது.
தற்போது சந்தையில் ஆதிக்கம் செலுத்தி வரும் ஜோமேட்டோ மற்றும் ஸ்விக்கி ஆகிய நிறுவனங்கள் உணவகங்களிடம் இருந்து 16 முதல் 30 சதவீதம் வரை கமிஷன் வசூலிக்கின்றன. ஆனால், பிளிப்கார்ட் வெறும் 10 சதவீத கமிஷன் கட்டணத்தை மட்டுமே சலுகையாக வழங்கி உணவக உரிமையாளர்களை ஈர்த்து வருகிறது.
மத்திய அரசின் ஓஎன்டிசி தளம் மூலமாக இந்த சேவையை பிளிப்கார்ட் வழங்குவதால் உள்கட்டமைப்பு செலவுகள் கணிசமாகக் குறைகின்றன. இதன் மூலம் உணவக உரிமையாளர்களின் லாப வரம்பு அதிகரித்து, வாடிக்கையாளர்களுக்கு நியாயமான விலையில் உணவு கிடைக்க வாய்ப்புள்ளது.
இந்திய உணவு விநியோகச் சந்தையின் வரலாற்றை நோக்கினால், ஸ்விக்கி மற்றும் ஜோமேட்டோ போன்ற நிறுவனங்கள் தொடக்கத்தில் மிகக் குறைந்த கமிஷன் கட்டணத்திலேயே சேவையைத் தொடங்கின. பின்னர் சந்தையில் போட்டி குறைந்த நிலையில், ஊபர் ஈட்ஸ் நிறுவனத்தை ஜோமேட்டோ வாங்கிய பிறகு இருமுனை ஆதிக்கம் உருவானது.
போட்டி இல்லாத சூழலைப் பயன்படுத்தி ஆன்லைன் தளங்கள் கமிஷன் கட்டணங்களை படிப்படியாக உயர்த்தியதால் உணவக உரிமையாளர்கள் கடும் பாதிப்புக்கு உள்ளாகினர். இதன்காரணமாக உணவகங்கள் ஆன்லைனில் உணவுப் பட்டியலின் விலையை உயர்த்த வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டனர்.
தற்போது பிளிப்கார்ட் வழங்கும் 10 சதவீத கமிஷன் சலுகை பல ஆண்டுகளாக அதிக கமிஷனால் தவித்து வந்த உணவகங்களுக்குப் பெரிய நிம்மதியை அளித்துள்ளது. மேலும், ‘பிளிப்கார்ட் மினிட்ஸ்’ அதிவேக டெலிவரி நெட்வொர்க்கை இதற்காகப் பயன்படுத்துவதன் மூலம் குறைந்த செலவில் உணவை விநியோகிக்க முடியும்.
பெங்களூருவில் மேற்கொள்ளப்படும் இந்த முதற்கட்ட பரிசோதனை முயற்சி வெற்றிபெற்றால், சென்னை மற்றும் மும்பை போன்ற பிற முக்கிய நகரங்களுக்கும் இச்சேவை விரிவாக்கப்படும். பிளிப்கார்ட்டின் இந்த அதிரடி வரவு பல ஆண்டுகளாக நிலவி வந்த ஜோமேட்டோ மற்றும் ஸ்விக்கியின் ஆதிக்கத்திற்குப் பெரிய சவாலாக அமையும்.





