கோடி சம்பளம் வாங்கியும் ரூ.15,000 வரி கட்ட காசில்லையா? – இணையத்தில் வைரலாகும் சம்பவம்!

காகிதத்தில் இருக்கும் சொத்துக்களின் மதிப்பு உங்களைச் செல்வந்தராகக் காட்டலாம். ஆனால், ஆபத்து அல்லது அவசர காலத்தில் கையில் இருக்கும் ‘பணப்புழக்கம்’ (Liquidity) மட்டுமே உங்களை நிதி நெருக்கடியிலிருந்து காப்பாற்றும். இந்த உண்மையைப் புரிய வைக்கும் வகையில், சமூக வலைதளத்தில் ஆடிட்டர் (CA) ஒருவர் பகிர்ந்த நிஜ வாழ்க்கைச் சம்பவம் இணையவாசிகளிடையே பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.

ஆண்டுக்கு ரூ.1 கோடிக்கும் அதிகமாகச் சம்பளம் வாங்கும் ஒரு உயர் அதிகாரி, சொந்தமாக 3 வீடுகள் என வெளி உலகிற்கு மிகவும் வசதியானவராகக் காட்சி அளித்தார். ஆனால், வருமான வரி தாக்கல் செய்யும்போது ரூ.15,000 வரியாகச் செலுத்த வேண்டியிருந்த நிலையில், அதை உடனடியாகக் கட்ட அவரது வங்கிக் கணக்கில் பணம் இல்லை. “அடுத்த மாதம் சம்பளம் வந்தவுடன் கட்டிக் கொள்கிறேன்” என்று அவர் கூறியபோது, தாமதமாகக் கட்டினால் வட்டி அபராதம் விதிக்கப்படும் என ஆடிட்டர் எச்சரித்தார். இதனால் வேறு வழியின்றி, அவர் தனது நண்பரிடம் ரூ.15,000 கடன் வாங்கி வரியைச் செலுத்தினார்.

ஐந்து ஆண்டுகளாகக் கோடி கணக்கில் சம்பளம் வாங்கியும், அனைத்துப் பணத்தையும் வீடுகள் வாங்குவதிலும் கட்டுமானத் திட்டங்களிலும் முதலீடு செய்ததால், அவரிடம் உடனடி பணப்புழக்கம் இல்லாமல் போயுள்ளது. நாம் எவ்வளவு சம்பாதிக்கிறோம் என்பதை விட, அந்தச் சம்பாதியத்தை எவ்வாறு நிர்வகிக்கிறோம் என்பதே முக்கியம் என்பதை இச்சம்பவம் நிரூபிக்கிறது.

இதையும் படிக்க தவறாதீர்கள்:  ரூ.1.39 கோடி இருந்தாத்தான் குழந்தையை வளர்க்க முடியுமா? இணையத்தை பிளந்த கணக்கு!

நிதி நெருக்கடியைத் தவிர்க்க சில முக்கிய வழிகள்:

  • முதலீட்டுப் பரவலாக்கம்: சம்பாதிக்கும் பணத்தை அசையாச் சொத்துக்களில் (Real Estate) மட்டுமே முதலீடு செய்யாமல், எளிதில் பணமாக மாற்றக்கூடிய திட்டங்களிலும் முதலீடு செய்ய வேண்டும்.

  • அவசரகால நிதி (Emergency Fund): வேலை இழப்பு அல்லது மருத்துவ அவசர காலங்களை எதிர்கொள்ளக் குறைந்தது 6 முதல் 12 மாத செலவுகளுக்கான அவசர நிதியை எப்போதும் வைத்திருக்க வேண்டும்.

  • வரி திட்டமிடல்: கடைசி நேரத்தில் வரி கட்டுவதை விட்டுவிடாமல், அதற்காக முன்கூட்டியே லிக்விட் ஃபண்டுகளில் சிறுகச் சிறுகச் சேமித்து வர வேண்டும்.

  • லிக்விட் முதலீடுகள்: மொத்தப் பணத்தையும் நீண்டகாலத் திட்டங்களில் முடக்காமல், சேமிப்புக் கணக்கு, லிக்விட் மியூச்சுவல் ஃபண்டுகள் மற்றும் குறுகிய கால வைப்புத் தொகைகளிலும் வைத்திருக்க வேண்டும்.