மத்திய பாஜக அரசின் தொகுதி மறுவரையறை (Delimitation) திட்டத்திற்கு எதிராகத் தமிழக சட்டப்பேரவையில் மீண்டும் எதிர்ப்பு அலை வெடித்துள்ளது. மக்கள் தொகையைக் கட்டுப்படுத்தி நாட்டின் வளர்ச்சிக்குப் பெரும் பங்காற்றிய தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநிலங்களின் அரசியல் அதிகாரத்தை அடியோடு முடக்கும் முயற்சியில் பாஜக அரசு ஈடுபடுவதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனையடுத்து, லோக்சபா தொகுதிகளின் எண்ணிக்கையைத் தற்போதைய 543 ஆக நிலைநிறுத்த வேண்டும் என்றும், மாநிலங்களுக்கான பிரதிநிதித்துவ விகிதத்தைக் குறைக்கக் கூடாது என்றும் வலியுறுத்தும் அரசு தீர்மானம் பேரவையில் அதிரடியாக நிறைவேற்றப்பட்டது.
மத்திய அரசின் மக்கள் தொகைக் கொள்கையைச் சிறப்பாகச் செயல்படுத்திய தென் மாநிலங்களுக்குத் தொகுதி மறுவரையறை என்ற பெயரில் பாஜக அரசு தண்டனை வழங்கப் பார்க்கிறதா என்ற கேள்வி வலுத்துள்ளது. 2026 மக்கள் தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் தொகுதிகள் மறுசீரமைக்கப்பட்டால், மக்கள் தொகையைக் கட்டுப்படுத்தாத வட மாநிலங்களுக்குக் கூடுதல் லோக்சபா தொகுதிகள் கிடைக்கும். அதேவேளையில், தென் மாநிலங்களின் பிரதிநிதித்துவம் கணிசமாகக் குறைந்து, டெல்லியில் தென் மாநிலங்களின் குரல் நசுக்கப்படும் அபாயம் எழுந்துள்ளது.
பேரவையில் இத்தீர்மானத்தை முன்மொழிந்து பேசிய முதலமைச்சர் சி. ஜோசப் விஜய், பெண்களுக்கான 33 சதவீத இடஒதுக்கீட்டை உடனடியாக அமல்படுத்தாமல் பாஜக அரசு தாமதப்படுத்துவதற்குக் கடும் கண்டனம் தெரிவித்தார். “மகளிர் இடஒதுக்கீடு என்பது பெண்களின் அரசியலமைப்பு உரிமை. 2023-இல் சட்டம் இயற்றியும், மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் தொகுதி மறுவரையறைக்குப் பிறகே அது அமலுக்கு வரும் என்று சாக்குப்போக்குச் சொல்வது பெண்களின் உரிமையைப் பறிப்பதாகும். தொகுதி மறுவரையறையைக் காரணம் காட்டாமல், தற்போதைய 543 தொகுதிகளிலேயே 2029 லோக்சபா தேர்தலில் மகளிருக்கான 33% இடஒதுக்கீட்டை உடனடியாக வழங்க வேண்டும்,” என அவர் முழங்கினார்.
எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் பேசுகையில், பாஜக அரசின் இந்தத் திட்டத்திற்கு எதிராகத் தொடக்கம் முதலே குரல் கொடுத்து வரும் திமுக, தென் மாநில முதல்வர்களை ஒருங்கிணைத்துப் போராடி வருவதைச் சுட்டிக்காட்டினார். மேலும், தற்போதைய நிலையையே மேலும் 25 ஆண்டுகளுக்கு நீட்டிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார். அதேநேரத்தில், அதிமுக, பாஜக உள்ளிட்ட கட்சிகளின் எதிர்ப்பிற்கு இடையே, தென் மாநிலங்களின் உரிமையைப் பாதுகாக்கும் நோக்கில் இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்மானம் பெரும்பான்மை ஆதரவோடு நிறைவேற்றப்பட்டது.





