கர்நாடக மாநிலப் பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் பி.ஒய். விஜயேந்திரா, தமிழ்நாடு முதலமைச்சர் சி. ஜோசப் விஜய்க்கு எழுதியுள்ள கடிதம், மாநில எல்லைகளைக் கடந்து மீண்டும் ஒரு பெரிய அரசியல் புயலைக் கிளப்பியுள்ளது. மேகதாது அணைத் திட்டம் மற்றும் காவிரி நதிநீர் பங்கீடு குறித்து அவர் எழுதியுள்ள கடிதத்தில் “சகோதரத்துவம்”, “கூட்டுறவு” மற்றும் “அரசியல் முதிர்ச்சி” என்ற அழகான வார்த்தைகளைப் பயன்படுத்தியிருந்தாலும், அதற்குப் பின்னால் ஒளிந்திருக்கும் பாஜகவின் அப்பட்டமான இரட்டை வேட அரசியலைத் தற்போதைய நிகழ்வுகள் வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளன.
பெங்களூரில் இருக்கும் போது “மேகதாது அணையை யாராலும் தடுக்க முடியாது” என்றும், “கர்நாடகாவின் உரிமையை விட்டுத்தர மாட்டோம்” என்றும் ஆக்ரோஷமாக முழங்கும் அதே கர்நாடக பாஜக தலைவர்கள், தமிழக எல்லைக்கு வந்தவுடன் அப்படியே தலைகீழாக மாறுகிறார்கள். தமிழகத்தில் உள்ள பாஜக தலைவர்களோ, “மேகதாதுவில் ஒரு செங்கல்லைக் கூட வைக்க விடமாட்டோம்” என்று இங்குள்ள மக்களுக்கு வாக்குறுதி அளிக்கிறார்கள். பெங்களூரில் ஒரு பேச்சு, சென்னையில் ஒரு பேச்சு என ஒரே கட்சியின் இரண்டு மாநிலக் கிளைகள் இருவேறு குரல்களில் பேசுவது, பாஜகவின் “டபுள் என்ஜின்” அரசியல் நாடகத்தை அப்படியே அம்பலப்படுத்தியுள்ளது.
மேலும், தனது கடிதத்தில் கர்நாடக முன்னாள் முதலமைச்சர் பி.எஸ். எடியூரப்பா மற்றும் மறைந்த முன்னாள் தமிழ்நாடு முதலமைச்சர் மு.கருணாநிதி ஆகியோரின் “பெருந்தன்மையான அணுகுமுறையை” விஜயேந்திரா புகழ்ந்து பேசியிருப்பது மற்றொரு வேடிக்கையான முரண்பாடாகும். தமிழ்நாட்டில் தினமும் கலைஞர் கருணாநிதியின் பாரம்பரியத்தையும், திராவிட மாடலையும் வாரிசு அரசியல் என்று கடுமையாக விமர்சித்து வரும் பாஜக, தங்களுடைய மாநிலத்திற்குத் தண்ணீர் தேவை என்று வரும்போது மட்டும் அதே கருணாநிதியை “முதிர்ச்சியான தலைவர்” என்று கொண்டாடுவது அவர்களின் சுயநல அரசியலின் உச்சக்கட்டமாகும்.
குடிநீர்த் தேவை என்ற போர்வையில் தமிழ்நாட்டின் சட்டப்பூர்வ காவிரி உரிமைகளைப் பறிக்கும் மேகதாது திட்டத்தைச் “சகோதரத்துவத்தின் அடையாளம்” என்று சித்தரிப்பது, கீழ் பாசன மாநிலமான தமிழ்நாட்டிற்குச் செய்யப்படும் மிகப்பெரிய துரோகமாகும். உச்ச நீதிமன்றம் மற்றும் காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் உத்தரவுகளைக் மதிக்காமல், கடிதங்கள் மூலம் உணர்ச்சிப்பூர்வமாகத் தமிழ்நாட்டின் உரிமைகளை விட்டுத்தர வைக்கும் இந்த முயற்சியும், பாஜகவின் எல்லை கடந்த இரட்டை நிலப்பாடும் தமிழக மக்கள் மற்றும் விவசாயிகளிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.





