மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் போர்ச் சூழல் காரணமாகத் தொடர்ச்சியாக 260 நாட்களுக்கும் மேலாகக் கடலிலேயே பணியாற்றி வரும் அமெரிக்காவின் ‘யுஎஸ்எஸ் ஆபிரகாம் லிங்கன்’ (USS Abraham Lincoln) விமானம் தாங்கிப் போர்க் கப்பலில் உள்ள வீரர்களிடையே மனநலக் கோளாறுகளும் கடுமையான மன அழுத்தமும் தீவிரமடைந்துள்ளதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன.
கடந்த ஆண்டு நவம்பர் மாதம் சான் டியாகோவில் இருந்து புறப்பட்ட இந்த போர்க் கப்பலில் சுமார் 5,000 கடற்படை வீரர்களும் மெரைன் படையினரும் பணியாற்றி வருகின்றனர். திட்டமிடப்பட்ட பணி காலம் கடந்த மே மாதத்துடன் முடிவடைந்த போதிலும், அப்பகுதியில் போர் தீவிரமடைந்ததால் கப்பலின் வருகை தேதி பலமுறை நீட்டிக்கப்பட்டது. இதன் காரணமாக, கடந்த ஒன்பது மாதங்களில் வீரர்கள் ஒரே ஒரு முறை மட்டுமே தரைப்பகுதிக்குச் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
நீண்ட காலம் குடும்பத்தைப் பிரிந்து இருப்பது, போதிய ஓய்வின்மை, மோசமான உணவு மற்றும் கப்பலில் உள்கட்டமைப்புச் சிக்கல்கள் காரணமாகப் பல வீரர்கள் தீவிர மன அழுத்தத்திற்கு ஆளாகியுள்ளனர். இதில் சிலர் கப்பலில் இருந்து கடலில் குதித்துத் தற்கொலை செய்ய முயன்றதாகவும், சக வீரர்கள் அவர்களைத் தடுத்துக் காப்பாற்றியதாகவும் ஊடக அறிக்கைகள் சுட்டிக்காட்டுகின்றன.
சமீபத்தில் சான் டியாகோவில் நடைபெற்ற அதிகாரிகள் மற்றும் குடும்பத்தினருக்கான ஆலோசனைக் கூட்டத்தில், வீரர்களின் குடும்பத்தினர் தங்களது கடுமையான கவலையைத் தெரிவித்தனர். பல வீரர்கள் தங்களுக்கு வாட்ஸ்அப் மற்றும் குறுஞ்செய்திகள் மூலமாகத் தங்களது மன உளைச்சலைப் பகிர்ந்து கொண்டுள்ளதாக அவர்கள் தெரிவித்தனர்.
இதனிடையே, அமெரிக்க கடற்படை நிர்வாகம் கப்பலில் உள்ள வீரர்களுக்குத் தேவையான மருத்துவ உதவிகள், மனநல ஆலோசகர்கள் மற்றும் மத குருமார்களின் சேவைகள் வழங்கப்பட்டு வருவதாகவும், வீரர்களின் பாதுகாப்பு மற்றும் நல்வாழ்வுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளது. இருப்பினும், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் பாதுகாப்புத் துறையிடம் இருந்து இது குறித்த முழுமையான விளக்கங்களைக் கோரியுள்ளனர்.ew





