ஜெர்மனியைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வரும் உலகின் முன்னணி வாகன தயாரிப்பு நிறுவனமான ஃபோக்ஸ்வேகன் (Volkswagen), தனது உலகளாவிய பணியாளர்களில் சுமார் 15 சதவீதம் பேரை பணிநீக்கம் செய்யத் திட்டமிட்டுள்ளது. ஏற்கனவே அறிவிக்கப்பட்ட 50,000 பணிநீக்கங்களுடன் சேர்த்து, கூடுதலாக மேலும் 50,000 பணியாளர்களை நீக்க நிர்வாகக் குழுவும் மேற்பார்வைக் குழுவும் ஒருமனதாக ஒப்புதல் அளித்துள்ளன. இதன் மூலம் வரும் 2030-ஆம் ஆண்டுக்குள் மொத்தம் 1 லட்சம் பணியாளர்கள் பணிநீக்கம் செய்யப்படவுள்ளனர்.
ஆட்டோமொபைல் துறையின் வரலாற்றிலேயே மிகப்பெரிய இந்த மறுசீரமைப்பு நடவடிக்கைக்குப் பின்னணியில் சர்வதேச அளவிலான பொருளாதார சவால்கள் முக்கியக் காரணமாக அமைந்துள்ளன. அமெரிக்காவில் விதிக்கப்பட்டுள்ள அதிக அளவிலான வர்த்தக வரிகள் (US Tariffs) மற்றும் ஐரோப்பா மற்றும் ஆசியச் சந்தைகளில் சீன எலக்ட்ரிக் வாகன (EV) தயாரிப்பு நிறுவனங்கள் அளித்து வரும் கடும் போட்டி ஆகியவை ஃபோக்ஸ்வேகனின் வர்த்தகத்தைப் பெருமளவில் பாதித்துள்ளன. மேலும், ஐரோப்பியச் சந்தையில் சுமார் 5 லட்சம் வாகனங்களுக்கான உற்பத்தித் திறன் தேவைக்கும் அதிகமாக உபரியாக உள்ளதாகக் கண்டறியப்பட்டுள்ளது.
இந்த அதிரடிச் செலவுக் குறைப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக, ஃபோக்ஸ்வேகன் குழுமம் தயாரிக்கும் கார்களின் மாடல்களின் எண்ணிக்கை பாதியாகக் குறைக்கப்படவுள்ளது. மேலும், ஜெர்மனியில் உள்ள எம்டன், ஸ்விகாவ், ஹனோவர் மற்றும் நெக்கர்ஸ்அல்ம் ஆகிய இடங்களில் இயங்கி வரும் நான்கு முக்கிய உற்பத்தி ஆலைகளின் எதிர்காலச் செயல்பாடு குறித்தும் ஆலோசிக்கப்பட்டு வருகிறது. ஊழியர்களின் வேலைவாய்ப்பைப் பாதுகாப்பதற்கும் நிறுவனத்தின் நிதிநிலையைச் சீரமைப்பதற்கும் தொழில்சங்கங்களுடனான பேச்சுவார்த்தைக்குப் பிறகே இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க முடிவு எட்டப்பட்டுள்ளதாக ஃபோக்ஸ்வேகன் நிர்வாகம் தெரிவித்துள்ளது.





