உலகப் புகழ்பெற்ற திருமலை ஸ்ரீ வெங்கடேஸ்வர சுவாமி திருக்கோயிலுக்கு நாள்தோறும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்து வரும் நிலையில், திருமலையின் தூய்மையான சூழலையும் பசுமையையும் பாதுகாக்கத் திருமலை திருப்பதி தேவஸ்தானம் (TTD) அதிரடி மாற்றங்களைக் கொண்டு வந்துள்ளது. இதன் மாபெரும் திருப்பமாக, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநரான அனந்த் அம்பானி தேவஸ்தானத்திற்கு அளித்த ₹27.5 கோடி மதிப்பிலான 25 புதிய மின்சாரப் பேருந்துகள் (Electric Buses) தற்போது பக்தர்களின் இலவசப் பயன்பாட்டிற்காக அதிகாரப்பூர்வமாகத் தொடங்கப்பட்டுள்ளன!
கடந்த ஜூன் மாதம் திருமலை ஏழுமலையானைத் தரிசனம் செய்ய வந்த தொழிலதிபர் அனந்த் அம்பானி, தேவஸ்தானத்திற்கு ரிலையன்ஸ் அறக்கட்டளை (Reliance Foundation) சார்பில் 25 அதிநவீன மின்சாரப் பேருந்துகள் மற்றும் அவற்றுக்கான பிரத்யேக சார்ஜிங் நிலையங்களை இலவசமாக வழங்குவதாக வாக்குறுதி அளித்திருந்தார். அந்த வாக்குறுதியை அப்படியே நிறைவேற்றும் வகையில், ‘ஜியோ-பிபி’ (Jio-bp) நிறுவனத்தின் அதிநவீனத் தொழில்நுட்ப உதவியுடன் அமைக்கப்பட்ட EV சார்ஜிங் மையங்கள் மற்றும் 25 மின்சாரப் பேருந்துகள் அனைத்தும் தேவஸ்தானத்திடம் முறைப்படி ஒப்படைக்கப்பட்டுள்ளன.
Electric Dharma Rathas launched in Tirumala!
32 new electric buses take the fleet from 14 to 44, reducing devotees’ waiting time from 4 to 3 minutes and making their journey more convenient.#TTD #Tirumala #ElectricBuses #DharmaRathalu #SalakatlaBrahmotsavalu2026 pic.twitter.com/TJhMbTosSg
— Tirumala Tirupati Devasthanams (@TTDevasthanams) September 16, 2026
திருமலையில் நடைபெற்ற பிரம்மாண்ட விழாவில், ஆந்திரப் பிரதேச முதல்வர் நாரா சந்திரபாபு நாயுடு இந்த 25 புதிய மின்சாரப் பேருந்துகளின் சேவையை முறைப்படி கொடியசைத்துத் தொடங்கி வைத்தார். அதுமட்டுமின்றி, முதல்வர் சந்திரபாபு நாயுடு தேவஸ்தான மூத்த அதிகாரிகள் மற்றும் அமைச்சர்களுடன் இணைந்து புதிய மின்சாரப் பேருந்தில் நேரடியாகப் பயணம் செய்து, அதில் செய்யப்பட்டுள்ள அதிநவீன வசதிகளை நேரில் ஆய்வு செய்தார்.
விரைவில் தொடங்கவுள்ள வரலாற்று சிறப்புமிக்க ஸ்ரீவாரி சாலக்கட்ல பிரம்மோற்சவ விழாவை முன்னிட்டு, திருமலையில் மாசற்ற மற்றும் சத்தமில்லாத இலவசப் போக்குவரத்துச் சேவையை வழங்க இந்த மின்சாரப் பேருந்துகள் மிகப்பெரிய வரப்பிரசாதமாக அமையும். “ஏழுமலையானைத் தரிசிக்க வரும் கோடிக்கணக்கான பக்தர்களின் பயணத்தைச் சுமூகமாக்குவதும், திருமலையின் புனிதமான சூழலைப் பாதுகாப்பதும் எங்களது பாக்கியம் மற்றும் கடமை” என அனந்த் அம்பானி நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார். இந்த புதிய மின்சாரப் பேருந்துகளின் வருகையால் திருமலையில் டீசல் வாகனப் பயன்பாடு குறைந்து, காற்று மற்றும் ஒலி மாசுபாடு பெருமளவில் கட்டுப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.





