ஒரே நாளில் 6 பாடல் கம்போசிங், 6 நாட்களில் ரெக்கார்டிங்: இளையராஜாவின் மிரட்டலான வேகத்தால் சிலிர்த்துப்போன ராமராஜன் படக்குழு!

தமிழ் திரையுலகில் 1980 மற்றும் 1990-களில் கிராமப்புற மக்களின் உள்ளங்களைச் கவர்ந்த மறக்க முடியாத பல இசைத்தடங்களை வழங்கிய இசைஞானி இளையராஜா மற்றும் நடிகர் ராமராஜன் கூட்டணி, தங்களது 25-வது திரைப்படத்திற்காக மீண்டும் இணைந்துள்ளது. இப்படத்திற்கு ‘கடவுள் தந்த பரிசு’ எனப் பெயரிடப்பட்டுள்ளது.

புதுமுக இயக்குநர் காசிமாயன் கதை மற்றும் திரைக்கதை எழுதி இயக்கும் இப்படத்தின் மூலம், இந்த வெற்றிகரமான கூட்டணி மீண்டும் திரையுலகில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஒரே நாளில் 6 பாடல்கள் சாதனை

இப்படத்தின் பணிகளை அதிரடியாகத் தொடங்கியுள்ள இசைஞானி இளையராஜா, ‘கடவுள் தந்த பரிசு’ படத்திற்காக ஒரே நாளில் 6 பாடல்களைக் கம்போஸ் செய்து முடித்துள்ளார். அதுமட்டுமின்றி, அடுத்தடுத்த 6 நாட்களுக்குள்ளாகவே அனைத்துப் பாடல்களின் பதிவையும் வெற்றிகரமாக நிறைவு செய்து தனது அசாத்தியமான இசை வேகத்தை மீண்டும் நிரூபித்துள்ளார்.

இளையராஜாவின் இந்த வியக்கத்தக்க உழைப்பையும் இசைத் அர்ப்பணிப்பையும் பாராட்டும் விதமாக, படத்தின் கதாநாயகன் நடிகர் ராமராஜன் மற்றும் இயக்குநர் உள்ளிட்ட படக்குழுவினர் நேரில் சென்று இசைஞானி இளையராஜாவைச் சந்தித்து தங்களது மனமார்ந்த நன்றிகளையும் மகிழ்ச்சியையும் தெரிவித்தனர்.

நீண்ட இடைவெளிக்குப் பிறகு இணைந்த கூட்டணி

கடந்த காலங்களில் ‘எங்க ஊரு பாட்டுக்காரன்’, ‘கரகாட்டக்காரன்’ போன்ற பல பெருவெற்றிப் படங்களைக் கொடுத்துள்ள இந்தக் கூட்டணி, நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் இணைந்துள்ளது ரசிகர்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேலும், இப்படத்தில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு ராமராஜனுடன் இணைந்து புகழ்பெற்ற நகைச்சுவை நடிகர்களான செந்தில் மற்றும் கோவை சரளா ஆகியோர் நடிக்கவுள்ளனர். ராஜகோபால் மற்றும் எம். அடைக்கலம் வசனம் எழுதியுள்ள இப்படம், முழுமையான கிராமத்துக் குடும்பப் பாங்கான திரைப்படமாக உருவாகி வருவதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு பல மடங்கு அதிகரித்துள்ளது.