ஆளுநர் மாளிகையில் தமிழக ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகரைச் சந்தித்துப் பேசிய பின் செய்தியாளர்களைச் சந்தித்த அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், தவெக ஆட்சி தமிழ்நாட்டிற்குப் பிடித்த சாபக்கேடு எனக் கடுமையாக விமர்சித்துள்ளார்.
வளர்ச்சிப் பாதையில் செல்ல வேண்டிய தமிழகம், தற்போதைய ஆட்சியாளர்களின் நிர்வாகத் திறமையின்மையால் வீழ்ச்சியை நோக்கிச் சென்று கொண்டிருப்பதாக அவர் குற்றம்சாட்டியுள்ளார்.
சினிமாவை நம்பி ஏமாந்த மக்கள்
திராவிட ஆட்சிகளுக்கு மாற்றாகத் தூய சக்தியைக் கொண்டுவருவோம் என்றும், பல்வேறு மாற்றங்களைத் தருவோம் என்றும் கூறிவிட்டுப் பொதுமக்களைச் சினிமா கவர்ச்சியால் தவெகவினர் ஏமாற்றிவிட்டதாகத் தினகரன் சாடினார்.
“எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா ஆகியோர் அரசியலில் களமிறங்குவதற்கு முன்பே தங்களை முழுமையாகத் தயாரித்துக் கொண்டவர்கள். ஆனால், எந்தவித அரசியல் அனுபவமும் இல்லாமல் சினிமா புகழை நம்பி வந்தவர்கள் இன்று தமிழ்நாட்டைப் பின்னோக்கி அழைத்துச் செல்கின்றனர்” என்று அவர் குறிப்பிட்டார்.
விலைவாசி உயர்வு மற்றும் சட்டம் ஒழுங்கு சீர்கேடு
மற்ற மாநிலங்களை விடத் தமிழ்நாட்டில் விலைவாசியும் பணவீக்கமும் விண்ணை முட்டும் அளவிற்கு உயர்ந்துள்ளதாகத் தெரிவித்த அவர், தொழில் முதலீடுகள் அனைத்தும் அண்டை மாநிலங்களுக்குச் செல்வதாகவும் சுட்டிக்காட்டினார்.
மேலும், மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு முற்றிலும் சீரழிந்துவிட்டதாகவும், சிறுமிகள் காணாமல் போகும் சம்பவங்கள் பொதுமக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளதாகவும் அவர் கவலை தெரிவித்தார். காவல்துறையைச் சரியாகச் செயல்பட விடாமல் தவெகவினர் தங்களின் அரசியல் லாபத்திற்காகப் பயன்படுத்தி வருவதாகவும், இந்த நிலை நீடித்தால் இவர்களது ஆணவமும் அகம்பாவமும் இந்த அரசை விரைவில் கவிழ்த்துவிடும் என்றும் தினகரன் எச்சரித்தார்.