திருப்பரங்குன்றம் மலை மீது உள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்றப்படாமல், வழக்கமான உச்சிப்பிள்ளையார் கோயில் பகுதியில் தீபம் ஏற்றப்பட்ட விவகாரம் தமிழக அரசியலில் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, தவெக தலைமையிலான மாநில அரசையும் முதல்வர் விஜய்யையும் கடுமையாக விமர்சித்து தமிழக பாஜக மாநிலச் செயலாளர் வினோஜ் பி. செல்வம் கருத்து தெரிவித்துள்ளார்.
தவெக அரசு சிறுபான்மையினரைத் திருப்திப்படுத்தும் அரசியலில் ஈடுபடுவதாகவும், நாடு மற்றும் மாநிலத்தின் பெரும்பான்மை மக்களின் உணர்வுகளைப் புண்படுத்த விரும்புவதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார். இந்துக்கள் மற்றும் முருக பக்தர்களுக்கு ஆதரவாக பாஜகவும் அனைத்து இந்து அமைப்புகளும் துணை நிற்பதாகவும், முதல்வர் ஜோசப்புக்கு தமிழக மக்கள் வாழ்நாளில் மறக்க முடியாத பாடத்தைப் புகட்டுவார்கள் என்றும் வினோஜ் பி. செல்வம் கூறியுள்ளார்.
நீதிமன்ற உத்தரவும் அரசின் நிலைப்பாடும்
கார்த்திகை பௌர்ணமியான நவம்பர் 24 அன்று தீபத்தூணில் ஒருமுறை மட்டும் நிபந்தனைகளுடன் தீபம் ஏற்ற உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்திருந்த நிலையில், தமிழக அரசு சார்பில் சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. செவ்வாய்க்கிழமை மாலை தீபத்தூணில் தீபம் ஏற்றப்படாததைத் தொடர்ந்து திருப்பரங்குன்றத்தில் சில இடங்களில் போராட்டங்களும் பரபரப்பும் ஏற்பட்டன.
மறுபுறம், தீபத்தூணில் தீபம் ஏற்றுவதற்கு வரலாற்றுப் பின்னணி இல்லை என்றும், அது நல்லிணக்கம் மற்றும் சட்டம் ஒழுங்கைப் பாதிக்கக்கூடும் என்றும் தமிழக அரசு தரப்பில் நீதிமன்றங்களில் தெரிவிக்கப்பட்டு வருகிறது. இதனால், திருப்பரங்குன்றம் தீபத்தூண் விவகாரம் சட்ட ரீதியாகவும் அரசியல் ரீதியாகவும் தொடர்ந்து பேசுபொருளாக மாறியுள்ளது.