திரைப்படப் படப்பிடிப்புகளுக்கு இடையே சர்வதேசக் கார் பந்தயங்களிலும் தீவிரமாகப் பங்கேற்று வரும் நடிகர் அஜித்குமார், ரிலையன்ஸ் நிறுவனத்தின் விளம்பர முகமாக தொடர்ந்து களமிறங்கி வருவது ரசிகர்க மத்தியிலும் வணிக வட்டாரத்திலும் பெரும் கவனத்தைப் பெற்றுள்ளது. திரைப்படப் ஆடியோ வெளியீட்டு விழாக்கள் மற்றும் விளம்பரங்களில் அரிதாகவே தோன்றும் அஜித், தனது ‘அஜித் ரேசிங்’ (Ajith Kumar Racing) அணியின் மூலம் வணிக பிராண்டுகளுடன் கூட்டணி அமைத்து வருவது ஒரு புதிய பரிமாணத்தை எட்டியுள்ளது.
ஏற்கனவே சர்வதேசக் கார் பந்தயப் போட்டியின் போது, ரிலையன்ஸ் நிறுவனத்தின் ‘கம்பா எனர்ஜி’ (Campa Energy) பானத்தின் உத்தியோகபூர்வ எனர்ஜி பார்ட்னராக அஜித் குமார் ரேசிங் அணி ஒப்பந்தம் செய்யப்பட்டது. பந்தய உடையில் அஜித் தோன்றும் கம்பா எனர்ஜி விளம்பரங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றன.
அதன் தொடர்ச்சியாக, தற்போது ரிலையன்ஸ் நிறுவனம் புதிதாகத் தமிழ்நாட்டில் அறிமுகப்படுத்தியுள்ள ‘இன்டிபென்டன்ஸ்’ (Independence) பிஸ்கட் பிராண்டுகளின் அதிகாரப்பூர்வ விளம்பரத்திலும் அஜித்தின் ரேசிங் லுக் இடம் பெற்றுள்ளது.
ரிலையன்ஸ் வெளியிட்டுள்ள ‘இன்டிபென்டன்ஸ் பவர் அப்’ பிஸ்கட் அட்டைகளின் முன்பக்கத்தில் அஜித்தின் கார் பந்தயச் சீருடை வரைபடமும், பந்தயக் காரும் அச்சிடப்பட்டுள்ளன. மேலும், இந்தப் பிஸ்கட் பாக்கெட்டுகளில் ரசிகர்களுக்காகச் சிறப்பு ‘AK சர்ப்ரைஸ்’ (AK Surprise) க்யூ-ஆர் கோடும் (QR Code) இடம்பெற்றுள்ளது ரசிகர்களுக்குப் புதிய ஆச்சரியத்தை அளித்துள்ளது.
View this post on Instagram
ரிலையன்ஸ் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ சமூக ஊடகப் பக்கங்களிலும் இந்த விளம்பரம் தொடர்பான தகவல்கள் முறைப்படி அறிவிக்கப்பட்டுள்ளன. கார்ப்பரேட் மற்றும் விளையாட்டு உலகில் இந்திய அளவில் தனது அணியை முன்னிறுத்தி வரும் அஜித், தொடர்ச்சியாக ரிலையன்ஸ் போன்ற முன்னணி நிறுவனங்களுடன் விளம்பர ஒப்பந்தங்களை மேற்கொண்டு வருவது அவரது பிராண்ட் மதிப்பை மேலும் உயர்த்தியுள்ளது.