இன்றைய காலகட்டத்தில் இணையவழி பணப்பரிவர்த்தனைகள் எவ்வளவு எளிதாகி இருக்கிறதோ, அதே அளவிற்குச் சைபர் குற்றவாளிகளின் திருட்டு உத்திகளும் புதிய உச்சத்தை எட்டியுள்ளன. நாம் யாருக்கும் ஓடிபி (OTP) அனுப்பவில்லை, எந்தவொரு சந்தேகத்திற்கிடமான லிங்கையும் கிளிக் செய்யவில்லை என்பதால் நமது வங்கிப் பணம் பாதுகாப்பாக இருக்கிறது என்று இனி யாரும் நிம்மதியாக இருக்க முடியாது. அதற்குச் சான்றாக, பெங்களூருவைச் சேர்ந்த 27 வயது வாலிபர் ஒருவர், எவ்வித அலைபேசி அழைப்போ அல்லது ரகசியத் தகவல் பகிர்வோ இல்லாமலேயே தனது கணக்கில் இருந்து ரூ.7.2 லட்சத்தை இழந்துள்ளார்.
“சிம்-ஸ்வாப்” (SIM-Swap Fraud) எனப்படும் இந்த நவீன ரகசியத் திருட்டுத் தொழில்நுட்பம், தற்பொழுது ஒட்டுமொத்த மொபைல் பயனர்கள் மத்தியிலும் மிகப்பெரிய அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
சைபர் பாதுகாப்பு நிபுணர்கள் விளக்கும் இந்த மோசடியின் பின்னணி மிகவும் அதிர்ச்சியளிக்கக் கூடியதாகும். வழக்கமாக நடக்கும் ஆன்லைன் மோசடிகளைப் போலன்றி, இதில் திருடர்கள் பயனர்களைத் தொடர்பு கொள்வதே இல்லை. மாறாக, கசிந்த தரவுகள் (Data Leaks) மூலமாகப் பாதிக்கப்பட்ட நபரின் தனிப்பட்ட விபரங்களைச் சேகரிக்கும் நபர், மொபைல் நெட்வொர்க் நிறுவனங்களின் (Telecom Level) குறைபாடுகளைப் பயன்படுத்திப் பாதிக்கப்பட்டவரின் மொபைல் எண்ணிற்கு மற்றொரு டூப்ளிகேட் சிம் கார்டை (Duplicate SIM) ஆக்டிவேட் செய்து விடுகின்றனர்.
புதிய சிம் கார்டு செயல்பாட்டிற்கு வந்தவுடன், பாதிக்கப்பட்ட நபரின் மொபைலில் இருக்கும் ஒரிஜினல் சிம் கார்டு தானாகவே சிக்னலை இழந்து செயலிழந்துவிடும் (Network Loss). இதன் பின்னர், அந்த வங்கி கணக்கிற்கு வரும் அனைத்து ஓடிபிக்கள், ரகசியப் பாஸ்வேர்டு மாற்றங்கள் மற்றும் பணப் பரிவர்த்தனை விபரங்கள் அனைத்தும் திருடர்களின் கையில் இருக்கும் புதிய சிம் கார்டிற்குச் சென்று விடுகிறது. பாதிக்கப்பட்ட நபர் சாதாரண நெட்வொர்க் கோளாறு என்று நினைத்துக் கொண்டிருக்கும் சில நிமிடங்களிலேயே மொத்த பணமும் கணக்கில் இருந்து துடைத்தெறியப்படுகிறது.
முன்னாள் ஐபிஎஸ் அதிகாரியும் சைபர் கிரைம் நிபுணருமான பேராசிரியர் திரிவேணி சிங் இது குறித்துக் கூறுகையில், “சைபர் குற்றவாளிகள் தற்பொழுது மக்களை ஏமாற்றுவதை விடுத்து, நேரடியாக டெலிகாம் மற்றும் அடையாள சரிபார்ப்பு அமைப்புகளையே குறிவைக்கத் தொடங்கிவிட்டனர்” என எச்சரித்துள்ளார். இந்த ஆபத்தில் இருந்து தப்பிக்கப் பயனர்கள் உடனடியாகப் பின்பற்ற வேண்டிய முக்கிய வழிமுறைகள் இதோ:
-
அத்தெண்டிகேட்டர் செயலிகள்: முக்கியமான வங்கி மற்றும் நிதி சார்ந்த பரிவர்த்தனைகளுக்கு எஸ்எம்எஸ் (SMS) மூலமாக வரும் ஓடிபிக்களை பயன்படுத்துவதை முற்றிலுமாகத் தவிர்த்து, “கூகுள் அத்தெண்டிகேட்டர்” (Google Authenticator) அல்லது மைக்ரோசாப்ட் அத்தெண்டிகேட்டர் போன்ற சாதன அடிப்படையிலான செயலிகளைப் பயன்படுத்தத் தொடங்குங்கள்.
-
சிம் லாக் (SIM PIN): உங்களது ஸ்மார்ட்போன் செட்டிங்ஸ் பகுதிக்குச் சென்று, உங்களது சிம் கார்டிற்கு பிரத்யேக “SIM PIN” அல்லது சிம் லாக் வசதியை உடனடியாக ஆன் செய்து வையுங்கள்.
-
திடீர் சிக்னல் இழப்பு: உங்கள் மொபைலில் எவ்வித காரணமும் இன்றி திடீரென சிக்னல் முற்றிலும் துண்டிக்கப்பட்டால், அதனைச் சாதாரண நெட்வொர்க் கோளாறாகக் கருதாமல் உடனடியாக உங்கள் டெலிகாம் நிறுவனத்தைத் தொடர்பு கொண்டு புதிய சிம் மாற்றுதல் (SIM Replacement) கோரிக்கை எதுவும் விடுக்கப்பட்டுள்ளதா என்பதை உறுதி செய்யுங்கள்.
டிஜிட்டல் உலகில் நமது மொபைல் எண் தான் நமது ஒட்டுமொத்த டிஜிட்டல் அடையாளம் என்பதை உணர்ந்து, நுகர்வோர் அனைவரும் இந்த புதிய தொழில்நுட்ப மோசடி குறித்து விழிப்புடன் இருக்க வேண்டும் என அரசுத் தரப்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.





