பிஎஸ்என்எல் ரூ.1 பிளான் ரீ-என்ட்ரி: இலவச சிம் கார்டு, அன்லிமிடெட் ரீசார்ஜ் சலுகை அறிவிப்பு!

நாட்டின் 80-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, பொதுத்துறை டெலிகாம் நிறுவனமான பிஎஸ்என்எல் (BSNL) தனது புதிய வாடிக்கையாளர்களைக் கவரும் வகையில் புகழ்பெற்ற ‘ஃப்ரீடம் பிளான்’ (Freedom Plan) திட்டத்தை மீண்டும் அறிமுகப்படுத்தியுள்ளது.

இந்தச் சிறப்புச் சலுகையின் கீழ், புதிய வாடிக்கையாளர்களுக்கு வெறும் ரூ.1 கட்டணத்தில் இலவச சிம் கார்டு வழங்கப்படுவதோடு, முதல் ரீசார்ஜ் திட்டமும் இலவசமாக வழங்கப்படுகிறது. இதன் மூலம் வாடிக்கையாளர்கள் 24 நாட்களுக்குத் தடையற்ற அன்லிமிடெட் குரல் அழைப்புகள், தினமும் 100 இலவச எஸ்எம்எஸ்கள் மற்றும் தினமும் 1 ஜிபி அதிவேக 4ஜி டேட்டாவைப் பெற முடியும்.

கடந்த ஆண்டு சுதந்திர தினத்தின் போது ‘ஆஸாதி கா பிளான்’ என்ற பெயரில் ரூ.1-க்கு 30 நாட்கள் செல்லுபடியாகும் சலுகை அறிமுகப்படுத்தப்பட்டது. தற்போது ‘ஃப்ரீடம் 2.0’ என்ற மாற்றத்துடன், இத்திட்டத்தின் செல்லுபடி காலம் 24 நாட்களாகவும், தினசரி டேட்டா 1 ஜிபியாகவும் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. இந்தச் சலுகை செப்டம்பர் 12 வரை மட்டுமே பயன்பாட்டில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்திட்டம் புதிய வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே செல்லுபடியாகும்.

ரூ.2,399 ஆண்டறிக்கை திட்டத்தில் கூடுதல் சலுகை:

சுதந்திர தினத்தை ஒட்டி பிஎஸ்என்எல் தனது ரூ.2,399 வருடாந்திர பிரீபெய்ட் திட்டத்திலும் மாற்றங்களைச் செய்துள்ளது. வழக்கமாக 365 நாட்கள் செல்லுபடியாகும் இத்திட்டத்திற்கு, தற்போது கூடுதல் சலுகையாக 47 நாட்கள் கூடுதலாக வழங்கப்பட்டு மொத்தம் 412 நாட்கள் செல்லுபடி காலம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் அன்லிமிடெட் அழைப்புகள், தினமும் 100 எஸ்எம்எஸ் மற்றும் தினமும் 2 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. ஆகஸ்ட் 12 முதல் செப்டம்பர் 12 வரை ரீசார்ஜ் செய்யும் வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே இந்தக் கூடுதல் செல்லுபடி காலம் கிடைக்கும்.