“ரயில்வேயின் அதிரடி வேட்டை!” – சென்னை சென்ட்ரலில் புகை பிடித்த 219 பேருக்கு அபராதம்; பயணிகளுக்கு முக்கிய எச்சரிக்கை!

சென்னை எம்ஜிஆர் சென்ட்ரல் ரயில் நிலையம் மற்றும் ரயில்வே வளாகங்களில் புகைப்பிடிப்பவர்களுக்கு எதிராக ரயில்வே நிர்வாகம் தற்போது கடும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. ரயில்கள் மற்றும் ரயில் நிலைய வளாகங்களில் புகைப்பிடிப்பது ஏற்கனவே சட்டப்படி தடை செய்யப்பட்டுள்ள நிலையில், இந்த விதிகளை மீண்டும் ரயில்வே துறை உறுதிப்படுத்தியுள்ளது.

இதன் ஒரு பகுதியாக, சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் ரயில்வே பாதுகாப்புப் படையினர் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, தடையை மீறி பொது இடங்களில் புகை பிடித்ததாக 219 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டது. பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்யவும், தீ விபத்துகளைத் தவிர்க்கவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ள எச்சரிக்கையில், “ரயில் பயணத்தின் போது அல்லது நிலைய வளாகங்களில் செய்யப்படும் சிறிய அலட்சியம் கூட மிகப்பெரிய தீ விபத்துகளுக்கும், உயிரிழப்புகளுக்கும் வழிவகுக்கும். எனவே, பயணிகள் தங்களின் பாதுகாப்பை கருதி புகைப்பிடிப்பதைத் தவிர்க்க வேண்டும்” என்று வலியுறுத்தப்பட்டுள்ளது. வரும் நாட்களில் இந்தச் சோதனை மேலும் தீவிரப்படுத்தப்படும் என்றும், விதிகளை மீறுபவர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ரயில்வே துறை எச்சரித்துள்ளது.

Leave a Comment