மக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கில், மத்திய அரசு ஒரு புரட்சிகரமான நடவடிக்கையை எடுத்துள்ளது. மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் மத்திய தகவல் தொடர்புத் துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா ஆகியோர் இணைந்து, நாடு முழுவதும் பயன்படக்கூடிய மொபைல் அடிப்படையிலான பேரிடர் தகவல் தொடர்பு அமைப்பை (Mobile-based Disaster Communication System) இன்று தொடங்கி வைக்க உள்ளனர்.
தொழில்நுட்பத்தின் சிறப்பம்சம்: இந்த அமைப்பை மத்திய தொலைத்தொடர்புத் துறை மற்றும் தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் (NDMA) இணைந்து உருவாக்கியுள்ளன. இதற்காக சேஜட் (SACHET) என்ற உள்நாட்டு தொழில்நுட்ப தளம் பயன்படுத்தப்படுகிறது. இது செல் பிராட்காஸ்ட் (Cell Broadcast) தொழில்நுட்பத்தின் மூலம் செயல்படுகிறது. இதன் மூலம், நெட்வொர்க் நெரிசலாக இருந்தாலும் கூட, ஒரு குறிப்பிட்ட பகுதியில் உள்ள அனைத்து செல்போன்களுக்கும் ஒரே நேரத்தில் எச்சரிக்கை செய்திகளை அனுப்ப முடியும்.
Here’s a look at major activities for the day. pic.twitter.com/X3vDCpUIFb
— Ministry of Information and Broadcasting (@MIB_India) May 2, 2026
19 மொழிகளில் எச்சரிக்கை: இந்தியாவின் பன்முகத்தன்மையைக் கருத்தில் கொண்டு, இந்த எச்சரிக்கை செய்திகள் தமிழ், ஹிந்தி, ஆங்கிலம் உட்பட 19 இந்திய மொழிகளில் அனுப்பப்படும். இதன் மூலம் அந்தந்தப் பகுதி மக்கள் தங்களுக்குப் புரியும் மொழியிலேயே எச்சரிக்கையைப் பெற்று தற்காப்பு நடவடிக்கைகளை எடுக்க முடியும்.
அலற வைக்கும் எச்சரிக்கை ஒலி: பூகம்பம், வெள்ளம், புயல், மின்னல் அல்லது தொழிற்சாலை விஷவாயு கசிவு போன்ற பேரிடர் காலங்களில் இந்த எச்சரிக்கை உங்கள் செல்போனுக்கு வரும். உங்கள் போன் ‘சைலண்ட்’ (Silent) மோடில் இருந்தாலும் கூட, இந்த எச்சரிக்கை வரும்போது போன் அதிர்வுடன் கூடிய பலத்த ஒலியை எழுப்பும். அந்தச் செய்தியை நீங்கள் திரையில் பார்த்து உறுதிப்படுத்தும் வரை அந்தச் சத்தம் ஒலிக்கக்கூடும்.
மத்திய அரசின் இந்தத் திட்டம், வரும் காலங்களில் இயற்கை பேரிடர்களால் ஏற்படும் உயிரிழப்புகளைப் பெருமளவு குறைக்க உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.





