மாணவர் போராட்டத்தில் போலீஸ் அராஜகம்: அமித் ஷா ராஜினாமா செய்ய வேண்டும் – அபிஜீத் டிப்கே ஆவேசம்!

தேர்வு முறைகேடுகளுக்கு எதிராக டெல்லியில் போராடிய மாணவர்கள் மீது நடத்தப்பட்ட காவல் துறை தாக்குதல்களுக்குப் பொறுப்பேற்று, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா உடனடியாகப் பதவி விலக வேண்டும் என்று ‘காக்ரோச் ஜனதா கட்சி’ (CJP) நிறுவனர் அபிஜீத் டிப்கே வலியுறுத்தியுள்ளார்.

மகாராஷ்டிராவின் சத்ரபதி சாம்பாஜி நகரில் செய்தியாளர்களிடம் பேசிய அபிஜீத் டிப்கே, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி அமித் ஷாவின் ராஜினாமாவை வலியுறுத்திய கருத்தை வழிமொழிவதாகத் தெரிவித்தார். அவர் பேசுகையில், “மாணவர்கள் கடுமையாகத் தாக்கப்பட்டதும், அவர்கள் போராட்டத்தில் ரத்தம் சிந்தியதும் அமித் ஷாவின் நேரடி உத்தரவு இன்றி நடந்திருக்க வாய்ப்பில்லை. அவர் கட்டாயம் ராஜினாமா செய்ய வேண்டும்” என்று ஆவேசமாகத் தெரிவித்தார்.

ஜூலை 20 அன்று டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் நடைபெற்ற போராட்டத்தின் போது, காவல் துறையினரே வன்முறையைத் தூண்டியதாக அபிஜீத் டிப்கே திடுக்கிடும் குற்றச்சாட்டை முன்வைத்தார். “போராட்டக்காரர்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்கான காரணத்தை உருவாக்க, போலீசாரே ஒரு லாரியில் கற்களையும், சேதமடைந்த வாகனத்தையும் கொண்டு வந்தனர். பாஜக ஆதரவாளர்கள் கற்களை வீச, கடைசியில் பழி மாணவர்கள் மீது சுமத்தப்பட்டது” என்று அவர் குற்றம் சாட்டினார்.

மேலும், சிஜேபி கட்சிக்கு வெளிநாட்டு நிதி கிடைப்பதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளுக்குப் பதிலளித்த அவர், “அமித் ஷா உள்துறை அமைச்சராக இருக்கும்போது எங்களுக்கு வெளிநாட்டு நிதி வருகிறது என்றால், அது அவருடைய தோல்விதானே? அப்படிப்பட்டவர் எப்படித் தன்னை சாணக்கியர் என்று சொல்லிக்கொள்ள முடியும்? அப்படியென்றால், அவர் தார்மீக அடிப்படையில் ராஜினாமா செய்ய வேண்டியதுதானே?” என்று கேள்வி எழுப்பினார்.

இதையும் படிக்க தவறாதீர்கள்:  "70 கோடி பெண்களின் உரிமை பறிப்பு!" - மகளிர் இடஒதுக்கீடு மசோதா தோல்வியால் அமித் ஷா ஆவேசம்; எதிர்கட்சிகளின் செயல் 'மன்னிக்க முடியாத குற்றம்'!

தனது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாகவும் டிப்கே பகிரங்கமாகத் தெரிவித்தார். “பாஜகவில் சேர வேண்டும் என்று என்னையும் என் பெற்றோர்களையும் மிரட்டினார்கள். சேராவிட்டால் மோசமான விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என்று எச்சரித்தனர்” என்று அவர் கூறினார்.

டிப்கேவின் இந்தக் குற்றச்சாட்டுகளை பாஜக மறுத்துள்ளது. அக்கட்சியின் மூத்த தலைவர் கேஷவ் உபாத்யே கூறுகையில், “அபிஜீத் டிப்கே போராட்டத்தின் முகமாக இருந்தார். மாணவர்களின் கோரிக்கையை ஏற்று, தேர்வு முறைகேடு தடுப்புச் சட்டத்தைக் கொண்டு வந்ததும், அமைச்சர் தர்மேந்திர பிரதானின் ராஜினாமாவைப் பெற்றதும் பாஜக அரசுதான். இதற்கெல்லாம் நன்றி தெரிவிக்காமல், அவர் அரசியல் செய்கிறார். ராகுல் காந்தியின் வழியைப் பின்பற்ற விரும்பினால் அவர் தாராளமாக காங்கிரஸில் சேரலாம்” என்று பதிலடி கொடுத்துள்ளார்.

தொடர்ச்சியான போராட்டங்களால் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகியது, மோடியின் மூன்றாவது பதவிக்காலத்தில் மக்கள் போராட்டத்தால் ஒரு அமைச்சர் பதவியை இழந்த முதல் நிகழ்வாகப் பார்க்கப்படுகிறது. தற்போது, போராட்டக்காரர்கள் மீது ஏவப்பட்ட அதிகப்படியான பலப்பிரயோகம் குறித்த விவாதங்கள் அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.