“போலீஸாரின் கொடூரம்.. லிஸ்ட் ரெடி!” – FRS சர்ச்சை.. டெல்லி போலீஸுக்கு CJP ஆசுதோஷ் ரான்கா பகிரங்க சவால்!

டெல்லி ஜந்தர் மந்தரில் நடைபெற்று வரும் போராட்ட களத்தில், முக அடையாள தொழில்நுட்ப (FRS) கேமராக்கள் மூலம் 2,000க்கும் மேற்பட்ட குற்றப்பின்னணி கொண்ட நபர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக டெல்லி காவலத்துறை அறிவித்திருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகக் கோரி காக்கரொச் ஜனதா கட்சி (CJP) மற்றும் பல்வேறு இளைஞர் அமைப்புகள் சார்பில் ஜந்தர் மந்தரில் தொடர் போராட்டங்கள் தீவிரமடைந்து வருகின்றன. இந்த நிலையில், அசம்பாவிதங்களைத் தடுக்கும் பொருட்டு அமைக்கப்பட்டுள்ள 4 எஃப்.ஆர்.எஸ் (FRS) கண்காணிப்பு கேமராக்கள் மூலம், இதுவரை 2,500க்கும் மேற்பட்ட குற்றப்பின்னணி கொண்டவர்கள் கண்டறியப்பட்டுள்ளதாக டெல்லி போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்தன. போராட்டத்தை சீர்குலைக்க சமூக விரோதிகள் ஊடுருவியிருப்பதாகக் கூறி இதுவரை 15 எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் காவலத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

காவல்துறையின் இந்த அறிவிப்பிற்கு காக்கரொச் ஜனதா கட்சியின் தேசிய செய்தித் தொடர்பாளர் ஆசுதோஷ் ரான்கா மிகக் காரசாரமான பதிலடியைக் கொடுத்துள்ளார். “சிறுவர்களின் மண்டையை உடைத்து, வீதிகளில் இழுத்துச் சென்று, தொண்டர்களின் விலா எலும்புகளை முறித்து, இளம் பெண்களின் கன்னத்தில் அறைந்த காவல் துறை அதிகாரிகளின் பட்டியலை நாங்களும் டெல்லி போலீஸிடம் வழங்குவோம்,” என்று அவர் கொந்தளித்தார்.

இதையும் படிக்க தவறாதீர்கள்:  "பக்தர் பலி.. 100க்கும் மேற்பட்டோர் அனுமதி!" – பூரி ரத யாத்திரையில் கூட்ட நெரிசலா? நிர்வாகக் கோளாறா?

மேலும் தொடர்ந்த அவர், “இந்தக் காவலர்களை நாங்கள் FRS கேமராக்கள் மூலம் அல்ல, பாதிக்கப்பட்ட பொதுமக்கள் மூலமாகவே அடையாளம் காண்போம். அந்தப் பட்டியலை பகிரங்கமாக மக்கள் மன்றத்தில் வெளியிடுவோம். இதற்கு டெல்லி காவலத்துறை என்ன பதில் சொல்லப்போகிறது என்பதைப் பார்ப்போம்,” என்று மிகக் கடுமையான சவாலை விடுத்துள்ளார்.

போராட்டக்காரர்கள் மீது காவலத்துறை தடியடி நடத்தி கொடூர அடக்குமுறையைக் கையாள்வதாக CJP மற்றும் மாணவர் அமைப்புகள் குற்றம்சாட்டி வரும் நிலையில், காவல்துறையோ எஃப்.ஆர்.எஸ் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்திப் போராட்டத்தைக் கொச்சைப்படுத்த முயல்வதாகக் கொந்தளிப்பு எழுந்துள்ளது. இரு தரப்பிற்கும் இடையே முற்றியுள்ள இந்த வன்முறை குற்றச்சாட்டுகள் மற்றும் வார்த்தை யுத்தம், தேசிய அளவில் ஜந்தர் மந்தர் போராட்டத்தை உச்சக்கட்ட பரபரப்பிற்குத் தள்ளியுள்ளது.