ஜூனியர் இன்ஜினியர் மகனுக்கு அமெரிக்காவில் படிப்போ? ₹1 கோடி நிதி விவகாரத்தில் CJP அபிஜீத் திப்கேவுக்கு சிக்கல்!

நீட் தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரத்தில் போராட்டம் நடத்தி நாடு தழுவிய அளவில் கவனத்தை ஈர்த்த ‘காக்ரோச் ஜனதா பார்ட்டி’ (CJP) அமைப்பின் பின்னால் இருக்கும் “நிதி விளையாட்டு” குறித்துப் பரபரப்பான சர்ச்சைகள் வெடித்துள்ளன. சூரத்தைச் சேர்ந்த ஆர்டிஐ (RTI) செயற்பாட்டாளர் அமித் திவாரி, சிஜேபி நிறுவனர் அபிஜீத் திப்கேவின் குடும்பச் சொத்துகள் மற்றும் அந்த அமைப்பிற்கு வந்து சேரும் நிதியின் பின்னணி குறித்துத் தொடர்ச்சியான புகார்களை அடுக்கியுள்ளார்.

மஹாராஷ்டிரா தொழில்முறை வளர்ச்சிக் கழகத்தில் (MIDC) ஜூனியர் இன்ஜினியராகப் பணியாற்றி ஓய்வுபெற்ற அபிஜீத் திப்கேவின் தந்தை பகவான்ராவ் திப்கே, சுமார் ₹60,000 முதல் ₹65,000 வரை மட்டுமே மாதச் சம்பளம் வாங்கியவர் என்று சுட்டிக்காட்டியுள்ள அமித் திவாரி, “இந்தச் சொற்பச் சம்பளத்தில் தனது மகனை அமெரிக்காவில் உள்ள பாஸ்டன் பல்கலைக்கழகத்தில் படிக்க வைக்க எப்படி முடிந்தது?” என்ற காரசாரமான கேள்வியை முன்வைத்துள்ளார். இது குறித்து மஹாராஷ்டிரா அரசு உரிய விசாரணை நடத்தி, வருமானத்திற்கு அதிகமாகச் சொத்து சேர்த்த வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

அதேவேளையில், டெல்லி காவல்துறையால் கைது செய்யப்படும் போராட்டக்காரர்களுக்கு உதவ மூத்த வழக்கறிஞரும் எம்பியுமான கபில் சிபல் அறிவித்த ₹1 கோடி சட்டப் பாதுகாப்பு நிதி மீது தேர்தல் ஆணையத்தின் கவனம் திருப்பப்பட்டுள்ளது. மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் கீழ் பதிவு கூட செய்யப்படாத ‘காக்ரோச் ஜனதா பார்ட்டி’ என்ற பெயரில் இயங்கும் அமைப்பிற்கு, ₹1 கோடி தொகையை நிதியாக அளிப்பது சட்டப்பூர்வமானதா என்பதையும், அந்த ₹1 கோடிக்கு உரிய 18 சதவீத ஜிஎஸ்டி (GST) வரி எங்கே செலுத்தப்படும் என்பதையும் மத்திய நிதி மற்றும் தேர்தல் அமைப்புகள் தணிக்கை செய்ய வேண்டும் என அமித் திவாரி கோரியுள்ளார்.

இதையும் படிக்க தவறாதீர்கள்:  மெட்டா இந்தியா தலைவர் அருண் ஸ்ரீனிவாஸ் மீது வழக்கு | பிரதமர் மோடி மார்பிங் வீடியோ

தொடக்கத்தில் நீட் தேர்வு விவகாரத்தை முன்னெடுத்துத் தூய்மையான மாணவர் இயக்கமாகத் தொடங்கிய இந்தப் போராட்டம், நாளடைவில் பிரதமரையும் அவரது மறைந்த தாயாரையும் அவதூறாகப் பேசும் அளவுக்குத் தடம் புரண்டுவிட்டதாக அவர் சாடியுள்ளார். “அரசியல் மேடைகளில் தார்மீகம் பேசும் அமைப்புகளின் முகமூடியைக் கழற்றினால், அதன் பின்னால் இதுபோன்ற விவரிக்க முடியாத பணப் பரிவர்த்தனைகளும் எல்லை மீறிய அரசியலும் தான் வெளிவருகின்றன” என அமித் திவாரி சுட்டிக்காட்டியுள்ளது அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.