“அரசியல் லாபத்திற்காக குழந்தைகளா?” – தவெக தலைவர் விஜய்க்கு வலுக்கும் கண்டனம்; தேர்தல் களத்தில் கிளம்பிய புதிய சர்ச்சை!

தமிழக சட்டமன்றத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், தமிழக வெற்றி்க் கழகத்தின் (TVK) தலைவர் விஜய் புதிய சர்ச்சையில் சிக்கியுள்ளார். தேர்தல் பிரச்சாரத்தின் போது குழந்தைகளைப் பயன்படுத்தியதாக, தமிழ்நாடு குழந்தை உரிமைகள் கண்காணிப்பகம் (TNCRO) அவருக்குக் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

தேர்தல் பிரச்சாரத்தில், நடைபெற்ற பொதுக்கூட்டம் ஒன்றில் பேசிய விஜய், “குழந்தைகள் தங்கள் பெற்றோரிடம் சாக்லேட் கேட்பது போல, எனக்கும் வாக்குக் கேட்க வேண்டும்” என்று குறிப்பிட்டிருந்தார். இந்த பேச்சுதான் இப்போது பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. அரசியல் லாபத்திற்காகப் பிஞ்சு உள்ளங்களில் அரசியல் கருத்துகளைத் திணிப்பது சட்டப்படி தவறு என்று குழந்தைகள் நல ஆர்வலர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

மனரீதியான பாதிப்பும் விதிகளும்: விஜய்யின் இந்தப் பேச்சு குறித்துக் கோவையில் ஏற்கனவே விசிக (VCK) சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. குழந்தைகளைத் தேர்தல் பிரச்சாரங்களில் ஈடுபடுத்துவது அல்லது அவர்களின் மூலம் பெற்றோரைத் தூண்டுவது தேர்தல் ஆணையத்தின் விதிகளை மீறுவதாகும். மேலும், இது குழந்தைகளின் மனநிலையில் மாற்றத்தை ஏற்படுத்தி, அவர்கள் வீட்டில் உணவு உண்ண மறுப்பது போன்ற செயல்களில் ஈடுபடத் தூண்டுவதாகவும் புகாரில் கூறப்பட்டுள்ளது.

கண்காணிப்பகத்தின் கோரிக்கை: தமிழ்நாடு குழந்தை உரிமைகள் கண்காணிப்பகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “அரசியல் கட்சித் தலைவர்கள் தங்கள் சுயநலத்திற்காகக் குழந்தைகளைப் பகடைக்காய்களாகப் பயன்படுத்துவதை நிறுத்திக்கொள்ள வேண்டும்” என வலியுறுத்தப்பட்டுள்ளது. மேலும், விஜய்யின் இந்தப் பேச்சு அடங்கிய வீடியோக்களைச் சமூக வலைதளங்களில் இருந்து நீக்க வேண்டும் என்றும், தேர்தல் ஆணையம் இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்க தவறாதீர்கள்:  காரைக்குடியில் நாளை தளபதி விஜய் ரோடு ஷோ! சிவகங்கையை அதிரவைக்கும் தவெக - முழு பயண விவரம் இதோ!

இருப்பினும், விஜய்யின் ஆதரவாளர்கள் இது குழந்தைகளிடம் அவர் கொண்டுள்ள அன்பின் வெளிப்பாடு மட்டுமே என்று வாதிட்டு வருகின்றனர். தேர்தல் நெருங்கும் வேளையில் எழுந்துள்ள இந்த ‘குழந்தை உரிமைகள்’ சர்ச்சை, தமிழக அரசியலில் ஒரு முக்கிய பேசுபொருளாக மாறியுள்ளது.

Leave a Comment