CM Vijay Economic Blueprint: “உங்களது பொருளாதார இலக்கு ஆச்சரியம் அளிக்கிறது…” டெல்லியில் முதலமைச்சர் விஜய்யை நேரில் சந்தித்து நெகிழ்ந்த நிதி ஆயோக் துணைத்தலைவர் அசோக் குமார் லஹிரி!

டெல்லியில் நடைபெற்ற முக்கிய கொள்கை ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்ற தமிழக முதலமைச்சர் விஜய்யின் பொருளாதார இலக்குகள் மற்றும் தொலைநோக்கு உத்திகள் தற்பொழுது தேசிய அளவில் பெரும் கவனத்தைப் பெற்றுள்ளன. குறிப்பாக, தமிழ்நாட்டின் வளர்ச்சி குறித்து முதலமைச்சர் விஜய் முன்வைத்துள்ள பொருளாதார வரைபடம் தமக்கு மிகுந்த ஆச்சரியத்தை அளித்துள்ளதாக நிதி ஆயோக் அமைப்பின் புதிய துணைத்தலைவர் அசோக் குமார் லஹிரி மிகவும் நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.

தேசிய அளவிலான இந்தக் கூட்டத்தில் உரையாற்றிய முதலமைச்சர் விஜய், ஒட்டுமொத்த தேசத்தின் வளர்ச்சிக்கான தமிழ்நாட்டின் பங்களிப்பை மிக ஆணித்தரமாகப் பதிவு செய்தார். பாரதப் பிரதமர் முன்னிலையில் உரையாற்றிய அவர், “வளர்ச்சியடைந்த இந்தியாவை உருவாக்குவதற்கான நமது கூட்டு அர்ப்பணிப்பை மேலும் வலுப்படுத்தும் வகையில், வரும் 2036 ஆம் ஆண்டிற்குள் தமிழ்நாட்டை 1.5 டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக உயர்த்துவதற்கு எங்கள் அரசு மிகத் தீவிரமாகப் பணியாற்றி வருகிறது” என அதிரடியாகத் தெரிவித்தார்.

முதலமைச்சரின் இந்த அதிரடியான உரைக்குப் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த நிதி ஆயோக் துணைத்தலைவர் அசோக் குமார் லஹிரி, தமிழ்நாட்டின் இந்த அசாத்திய இலக்கு மற்றும் திட்டமிடல் தன்னை வியப்பில் ஆழ்த்தியதாகக் குறிப்பிட்டார். மேலும், முதலமைச்சர் விஜய்யை நேரில் சந்தித்துக் கலந்துரையாடியது தமக்கு மிகுந்த மகிழ்ச்சியையும், ஒரு புதிய உத்வேகத்தையும் அளித்துள்ளதாக அவர் மனதாரப் பாராட்டியுள்ளார்.