தமிழ்நாட்டில் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், அரசியல் தலைவர்களுக்கு இடையேயான மேடைப் பேச்சுகளும், தனிப்பட்ட விமர்சனங்களும் நாளுக்கு நாள் புதிய பரிமாணத்தை எட்டி வருகின்றன. குறிப்பாக, வாக்காளர்களைக் கவரும் வகையில் தங்களை குடும்பத்தில் ஒருவராக சித்தரித்துக் கொண்டு பேசப்படும் பேச்சுக்களுக்கு எதிராக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி காரசாரமான விமர்சனங்களை முன்வைத்துள்ளார்.
பிரச்சாரக் கூட்டத்தில் பங்கேற்றுப் பேசிய எடப்பாடி பழனிசாமி, “பொதுமக்களிடம் சென்று ‘நான் உங்கள் வீட்டு அண்ணனாக இருப்பேன், மாமனாக இருப்பேன்’ என்றெல்லாம் பேசுவது ஒரு பச்சை பொய். அப்படிப்பட்ட போலியான வார்த்தைகளை நம்பக் கூடாது” என்று கடுமையாகக் சாடினார்.
தொடர்ந்து பாசம் மற்றும் குடும்ப உறவுகள் குறித்து பேசிய அவர், “உண்மையான பாசம் என்பது வார்த்தைகளில் சொல்வதில் இல்லை. பாசம் என்று சொன்னால், ஒருவர் தனது தாய், தந்தையோடு இணைந்து வாழ வேண்டும். தான் கட்டிய மனைவியோடு இணைந்து வாழ வேண்டும், தான் பெற்ற பிள்ளைகளுடன் சேர்ந்து வாழ வேண்டும். அங்கேதான் உண்மையான அன்பு மற்றும் பாசம் பிறக்கும். அதை விட்டுவிட்டு மேடைகளில் குடும்ப உறவுகளைப் பற்றி பேசுவது வெறும் நாடகம்” என்று சுட்டிக்காட்டினார்.
எடப்பாடி பழனிசாமியின் இந்த அதிரடி பேச்சு தற்போது தமிழக அரசியல் வட்டாரத்தில் மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. வாக்காளர்களிடம் குடும்ப உணர்வை ஏற்படுத்த முயற்சிக்கும் மாற்று அரசியல் தலைவர்களின் பிரசார யுக்திக்கு எடப்பாடி பழனிசாமி அளித்த இந்த பதிலடி, அதிமுக தொண்டர்கள் மத்தியிலும் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.