பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாகப் போற்றப்படும் வரலாற்றுச் சிறப்புமிக்க திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில், முன்னாள் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபுவுக்கு சிறப்பு அனுமதி மறுக்கப்பட்டுச் சாதாரண வரிசையில் சாமி தரிசனம் செய்ய வைக்கப்பட்ட சம்பவம் பக்தர்கள் மற்றும் ஆன்மீக அன்பர்களிடையே பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. திரை உலகப் பிரபலங்கள், அரசியல் முக்கியப் புள்ளிகள் மற்றும் தொழிலதிபர்கள் வரும்போதெல்லாம் அதிகாரிகளும் ஊழியர்களும் போட்டி போட்டுக்கொண்டு சிவப்புக் கம்பள வரவேற்பு அளித்து விஐபி தரிசனம் செய்து வைக்கும் நிலையில், அந்தத் துறையின் முன்னாள் அமைச்சருக்கே இந்த நிலைமையா எனப் பலரும் மூக்கில் மேல் விரலை வைத்துள்ளனர்.
நேற்று இரவு அண்ணாமலையார் கோயிலுக்கு வருகை தந்த முன்னாள் அமைச்சர் சேகர்பாபு, வழக்கமான நடைமுறைப்படி வடக்கு கோபுரம் வழியாக உள்ளே சென்று கொடிமரம் அருகே சம்பந்த விநாயகரையும், பின்னர் சண்டிகேஸ்வரரையும் வழிபட்டார். அதன்பின்னர், உண்ணாமுலை அம்மனைச் சிறப்பு அனுமதியுடன் தரிசனம் செய்வதற்காக வைகுண்ட வாசல் அருகே அமைக்கப்பட்டிருந்த விஐபி சிறப்பு வரிசையில் காத்திருந்தார். ஆனால், அங்கு வழிகாட்டவோ கதவைத் திறக்கவோ கோயில் ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் ஒருவர்கூட இல்லாதது அவருக்குப் அதிர்ச்சியளித்தது.
சிறிது நேரம் அங்கேயே காத்திருந்தும் அதிகாரிகள் யாரும் வராததால், மாற்று வழியின்றி சாதாரண பக்தர்கள் செல்லும் பொதுக் கியூ லைன் வரிசையிலேயே சேகர்பாபு நடந்து செல்லத் தொடங்கினார். அங்கு அமைக்கப்பட்டிருந்த மற்றொரு கேட் வழியாகச் சென்று அவர் உண்ணாமுலை அம்மனைத் தரிசித்தார். அறநிலையத்துறையைத் தன் கட்டுப்பாட்டில் வைத்திருந்த முன்னாள் அமைச்சருக்கே கோயிலில் ஊழியர்கள் இல்லாததால் சிறப்புத் தரிசனம் மறுக்கப்பட்டதும், அவர் சாதாரண பக்தர்களோடு கியூவில் நின்றதும் ஆன்மீக வட்டாரத்தில் மாபெரும் சர்ச்சையையும் பரபரப்பையும் உருவாக்கியுள்ளது.





