சூடான குளியலால் அடித்த அலாரம்: ஆஸ்திரேலியாவில் இந்தியப் பெண்ணுக்கு ரூ.1.3 லட்சம் அபராதம்!

ஆஸ்திரேலியாவில் வசிக்கும் இந்தியப் பெண் ஒருவர் தான் சந்தித்த ஒரு விசித்திரமான மற்றும் அதிர்ச்சியளிக்கும் அனுபவத்தைச் சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளது தற்போது இணையத்தில் பெரும் கவனத்தை ஈர்த்து வருகிறது. ஆஸ்திரேலியாவில் உள்ள தனது குடியிருப்பு கட்டிடத்தில் வெறும் ஐந்து நிமிடங்கள் மட்டுமே சூடான நீரில் குளித்துவிட்டு வெளியே வந்த நேரத்தில், கட்டிடத்தின் ஃபயர் அலாரம் (Fire Alarm) பலத்த சத்தத்துடன் அடிக்கத் தொடங்கியுள்ளது.

ஆரம்பத்தில் இது வழக்கமான தீயணைப்புப் பயிற்சி (Fire Drill) என்று நினைத்த அந்தப் பெண்ணிற்கு, அடுத்த சில நிமிடங்களில் பெரிய அதிர்ச்சி காத்திருந்தது. கட்டிடத்தின் மேலாளர் (Building Manager) நேரடியாக இவரது வீட்டிற்கு வந்து விசாரணை நடத்தியபோதே உண்மையான காரணம் தெரியவந்தது. அந்தப் பெண் குளித்து முடித்த பிறகுதான் இந்த அலாரம் அடிக்கத் தொடங்கியுள்ளது என்பதை அறிந்த மேலாளர், குளியலறையில் இருந்து வெளியேறிய அடர்ந்த நீராவியே (Steam) இந்த அலாரத்தைத் தூண்டியிருக்கக் கூடும் என்று தெரிவித்துள்ளார்.

குளித்த பிறகு வழக்கமாகக் குளிரும் என்பதால், குளியலறையில் உள்ள ‘எக்சாஸ்ட் ஃபேன்’ (Fan) பொத்தானை அந்தப் பெண் ஆன் செய்யாமல் விட்டுள்ளார். இதனால் குளியலறையில் தேங்கிய சூடான நீராவி வெளியேறி, கூரையில் இருந்த சென்சாரைத் தூண்டியதால் இந்த அசம்பாவிதம் நடந்துள்ளது. ஆஸ்திரேலிய விதிகளின்படி, தவறான காரணத்திற்காகத் தீயணைப்புப் படையினருக்கு அலாரம் சென்று அவர்கள் நேரில் வந்தால், அதற்குக் காரணமானவருக்குத் தண்டனையாக சுமார் 1,800 ஆஸ்திரேலிய டாலர்கள் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.1.3 லட்சம்) வரை அபராதம் விதிக்கப்படும்.

இதையும் படிக்க தவறாதீர்கள்:  "இரவு 9 மணிக்குத்தான் பார்ட்டியே தொடங்கும்!" – இந்தியாவில் வாழும் அமெரிக்கப் பெண் பகிர்ந்த 5 அதிர்ச்சி உண்மைகள்!

தான் செய்த ஒரு சிறிய தவறுக்காக இவ்வளவு பெரிய தொகையை அபராதமாகச் செலுத்த வேண்டிய சூழல் ஏற்பட்டதை நினைத்து அந்தப் பெண் இன்னும் ஆச்சரியத்திலும் அதிர்ச்சியிலும் உறைந்துள்ளார். இந்தச் சம்பவத்தை அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோவாகப் பகிர்ந்துள்ள நிலையில், வெளிநாடுகளில் வசிக்கும் இந்தியர்கள் இதுபோன்ற விதிகளில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என்று நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.