போட்டி நிறைந்த தற்போதைய ஐடி துறையில் வேலை கிடைப்பதே குதிரைக் கொம்பாக இருக்கும் நிலையில், 24 வயது கணினி அறிவியல் பட்டதாரியான லூசியானா டயஸ் அல்பாடன் (Luciana Diaz Albadan) கையாண்ட தில்லான உத்தி இப்போது இணையத்தில் காட்டுத்தீ போல வைரலாகி வருகிறது. வழக்கமான ரெஸ்யூம்களை அனுப்பி அலுத்துப்போன அவர், நிறுவனத்தின் பெரிய பலவீனத்தையே தனக்கான வாய்ப்பாக மாற்றி மாஸ் காட்டியுள்ளார்.
2024-இல் பட்டப்படிப்பை முடித்துவிட்டு பல கதவுகளைத் தட்டிய லூசியானாவுக்கு ஆரம்பத்தில் ஏமாற்றமே மிஞ்சியது. ஆயிரக்கணக்கானோர் அனுப்பும் அதே பாணியிலான விண்ணப்பங்களுக்கு நடுவே தனது மெசேஜ் தனித்து தெரிய வேண்டும் என யோசித்தவர், ‘டெனெக்ஸ்’ (Tenex) என்ற செயற்கை நுண்ணறிவு நிறுவனத்தின் இணையதளத்தை ஆராய்ந்தார்.
அப்போது அந்த நிறுவனத்தில் பணியாற்றிக் கொண்டிருந்த டஜன் கணக்கிலான ஊழியர்கள் அனைவரும் ஆண்கள் மட்டுமே என்பதை லூசியானா கவனித்தார். உடனே சற்றும் தயங்காமல், “டெனெக்ஸ் இதுவரை ஒரு பெண்களைக் கூட தேர்வு செய்யவில்லை” (Tenex has swiped right on 0 women) என்ற அதிரடி தலைப்புடன் அந்த நிறுவனத்தின் நிறுவனர்களுக்கு நேரடியாக ஒரு மின்னஞ்சலைத் தட்டினார்.
அந்த ஈமெயிலின் முதல் வரியிலேயே, “என் பெயர் லூசியானா… உங்கள் நிறுவனத்தில் கால் பதிக்கும் முதல் பெண் ஊழியராக நான் தான் இருக்கப் போகிறேன்!” என்று கெத்தாகக் குறிப்பிட்டிருந்தார். செயற்கை நுண்ணறிவு நிறுவனத்திற்கு விண்ணப்பித்தபோதிலும், எந்தவொரு ஏஐ டூலையும் பயன்படுத்தாமல் தனது சொந்த யோசனையில் இந்த மெசேஜை அனுப்பியது தான் இதற்கெல்லாம் ஹைலைட்.
இந்த வித்தியாசமான பஞ்ச் மெசேஜைப் பார்த்த டெனெக்ஸ் நிறுவனத்தின் இணை நிறுவனர் அலெக்ஸ் லிபர்மேன் (Alex Lieberman) ஷாக் ஆனாலும், லூசியானாவின் துணிச்சலையும் சமயோசித புத்தியையும் பார்த்து வியந்து போயினார். உடனடியாக அவருக்கு நேர்முகத் தேர்வுக்கான அழைப்பு அனுப்பப்பட்டு, பல கட்டப் பரீட்சைகளுக்குப் பிறகு அவருக்கு ஸ்ட்ரேட்டஜிஸ்ட் (Strategist) பதவியும் வழங்கப்பட்டது.
இது குறித்துப் பேசிய வேலைவாய்ப்பு ஆலோசகர் கைல் எலியட் (Kyle Elliott), மற்றவர்கள் செய்வதை அப்படியே காப்பி அடிப்பதை விட, சொந்த ஆளுமையையும் தைரியத்தையும் வெளிப்படுத்தும் லூசியானாவின் இந்த அணுகுமுறை வேலை தேடுபவர்களுக்குச் சிறந்த பாடம் என்று பாராட்டியுள்ளார்.





