தமிழகத்தில் புதிய அரசு பொறுப்பேற்றதைத் தொடர்ந்து, இல்லத்தரசிகள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த ஜூன் மாதத்திற்கான மகளிர் உரிமைத் தொகை ரூ.1,000, இன்றைய தினம் தகுதியான பெண் பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் வெற்றிகரமாக வரவு வைக்கப்பட்டுள்ளது. முதலமைச்சர் ஜோசப் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழக (TVK) அரசு பொறுப்பேற்ற பிறகு, வழங்கப்படும் இரண்டாவது மாத தவணை இது என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த சட்டமன்றத் தேர்தல் பிரசாரத்தின் போது, முந்தைய திமுக அரசால் கொண்டு வரப்பட்ட முக்கிய மக்கள் நலத்திட்டங்கள் அனைத்தும் தவெக ஆட்சியில் எவ்வித தடையுமின்றி தொடர்ந்து செயல்படுத்தப்படும் என்று முதலமைச்சர் விஜய் உறுதியளித்திருந்தார். அதன்படியே, புதிய அரசு அமைந்த முதல் மாதமான மே மாதத்தில் மகளிர் உரிமைத் தொகை உரிய நேரத்தில் வழங்கப்பட்ட சூழலில், தற்பொழுது ஜூன் 15 ஆம் தேதியான இன்றும் சுமார் 1.31 கோடி பெண்களின் வங்கிக் கணக்குகளுக்கு நேரடியாகப் பணம் சென்றடைந்துள்ளது.
இந்தத் திட்டம் தடையின்றித் தொடர்வது இல்லத்தரசிகள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருந்தாலும், மற்றொரு புறம் தேர்தல் வாக்குறுதியான ரூ.2,500 உயர்வு எப்போது அமலுக்கு வரும் என்ற கேள்வியும் பரவலாக எழுந்து வருகிறது. தவெக ஆட்சி அமைந்தால் மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500 ஆக உயர்த்தி வழங்கப்படும் எனத் தேர்தல் சமயத்தில் அறிவிக்கப்பட்டிருந்தது.
இதுகுறித்து ஏற்கனவே விளக்கம் அளித்திருந்த முதலமைச்சர் விஜய், இந்தத் திட்டத்தினை முழுமையாக மறுசீரமைப்பு செய்து தகுதியான புதிய பயனாளிகளைச் சேர்க்கவும், தொகையை உயர்த்தி வழங்கவும் அரசுக்குக் கூடுதல் கால அவகாசம் தேவைப்படுகிறது என்று குறிப்பிட்டிருந்தார். தற்போது தாலுகா அலுவலகங்கள் தோறும் புதிய ரேஷன் கார்டு வைத்திருப்பவர்கள் மற்றும் விடுபட்ட பெண்களிடம் இருந்து புதிய விண்ணப்பங்களைப் பெறும் பணிகள் நடந்து வருவதால், இந்த மறுசீரமைப்புப் பணிகள் முடிந்தவுடன் தொகை உயர்வு குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை தவெக அரசு வெளியிடும் என்று கோட்டை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.





