மதுராந்தகம் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல் பிரசாரம் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவரும் முதல்வருமான சி. ஜோசப் விஜய் மற்றும் கட்சியின் வேட்பாளர் கே. மரகதம் குமரவேல் ஆகியோர் பங்கேற்ற பிரமாண்டப் பிரசாரப் பொதுக்கூட்டம் செப்டம்பர் 25 அன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் எதிர்த்தரப்பு கட்சிகளான திமுக மற்றும் அதிமுகவின் குற்றச்சாட்டுகளுக்குத் தகுந்த பதிலடி கொடுக்கும் வகையில் அமைந்த முக்கிய உரையாடல்கள் பெரும் கவனத்தைப் பெற்றுள்ளன.
வேட்பாளர் மரகதம் குமரவேலின் உணர்ச்சிப்பூர்வ பேச்சு: பிரசார மேடையில் பேசிய வேட்பாளர் மரகதம் குமரவேல், “என்னை பார்த்துக் கொள்வீர்களோ இல்லையோ, மதுராந்தகம் தொகுதி மக்களைப் பார்த்துக் கொள்ளுங்கள் அண்ணா… அவர்களுக்குத் தேவையான அனைத்து வளர்ச்சித் திட்டங்களையும் செய்து கொடுக்க வேண்டும் அண்ணா” என்று முதல்வர் விஜய்யிடம் உருக்கமாகக் கோரிக்கை வைத்தார்.
தொடர்ந்து தன் மீதான கட்சித் தாவல் விமர்சனங்கள் குறித்துப் பேசிய அவர், “மதுராந்தகம் தொகுதி மக்களுக்கு வளர்ச்சித் திட்டங்களைச் செய்து தருவதாக வாக்குறுதி கொடுத்துள்ளேன், அதற்காகவே தவெகவில் இணைந்தேன். கொள்கையில் உறுதியாக இருக்கும் விஜய் எனக்கு ஏன் பெட்டி கொடுக்கப் போகிறார்? நான் ஏன் பெட்டி வாங்கப் போகிறேன்?” என்று கேள்வி எழுப்பினார். மேலும், அதிமுகவிலிருந்து வெளியேறியபோது கடும் மன உலைச்சலுக்கு ஆளானதாகவும், அந்த இக்கட்டான சூழலில் தமக்குக் கை கொடுத்து ஆதரவாக நின்றவர் முதல்வர் விஜய் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
முதல்வர் விஜய்யின் அதிரடி பதில்: கூட்டத்தில் உரையாற்றிய தவெக தலைவர் முதல்வர் விஜய், எதிர்தரப்பினரின் விமர்சனங்களுக்குத் தனது பாணியில் பதிலடி கொடுத்தார். “எப்போது பார்த்தாலும் ஸ்டாலினைப் பற்றியே பேசுகிறீர்கள் என்று சொல்கிறார்கள். ஜெயித்தாலும் தோற்றாலும் அவர் தான் என் அங்கிள்… ஸ்வீட் அங்கிள். இந்தத் தேர்தலில் இருவருக்குத் தான் போட்டி. ஒன்று தூய சக்தி தவெக; மற்றொன்று தீய சக்தி திமுக” என்று கூறினார்.
தனக்கு எதிரான அரசியல் தாக்குதல்கள் குறித்துப் பேசிய அவர், “‘திக் ஸ்கின்’ (Thick Skin) என்பதற்கு உலகத்தில் நானே சிறந்த உதாரணம். 34 வருடங்களாக எல்லாவற்றையும் பார்த்துவிட்டுத்தான் வந்துள்ளேன்; எனக்கு இதெல்லாம் புதிதல்ல” என்று குறிப்பிட்டார். மேலும் சட்டமன்ற அனுபவம் குறித்துப் பேசுகையில், “சட்டமன்றத்தில் திமுகவினர் கத்துவது எனக்கு முதலில் புதிராக இருந்தது; ஆனால் என் குரலை முடக்கவே அவர்கள் அப்படிச் செய்கிறார்கள் என்பதைப் புரிந்து கொண்டு, நானும் கத்திப் பேசினேன்” எனத் தெரிவித்தார்.