முன்னாள் பள்ளிப் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள சம்பவம் தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், இக்கைது நடவடிக்கைக்குக் கடுமையான கண்டனத்தைப் பதிவு செய்துள்ளார் திமுக தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின்.
ஆளும் த.வெ.க. அரசை மிகக் கடுமையாகச் சாடி ஸ்டாலின் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
“நிர்வாகச் சீர்கேட்டை மறைக்கப் பார்க்கிறது த.வெ.க அரசு!”
மு.க.ஸ்டாலின் தனது அறிக்கையில் தெரிவித்ததாவது: “அரசியல் காழ்ப்புணர்வோடு முன்னாள் அமைச்சர் திரு. அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்களைக் கைது செய்துள்ள த.வெ.க. அரசுக்கு எனது கடும் கண்டனம்! தன் மீதான குற்றச்சாட்டுகள் குறித்த விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு வழங்கி வந்த திரு. அன்பில் மகேஸ் அவர்களைக் கைது செய்திருப்பதன் மூலம், சந்தி சிரிக்கும் சட்டம் ஒழுங்கின் அவலட்சணத்தையும், அழுகிக் கொண்டிருக்கும் நிர்வாகச் சீர்கேட்டையும் சில நாட்களுக்கு மறைத்து, மக்களின் கவனத்தைத் திசைதிருப்பிவிடலாம் என்று ஆளும் அரசு நினைக்கின்றது.”
மேலும், சட்டப்போராட்டம் குறித்துப் பேசிய அவர், “அன்பில் மகேஸ் அவர்கள் தன் மீதான குற்றச்சாட்டுகளைச் சட்டப்படி எதிர்கொள்வார். அதேசமயம், இதுபோன்ற கைது நடவடிக்கைகளால் மக்களின் கோபத்தைத் திசைதிருப்பித் தப்பித்துக்கொள்ளலாம் என்று நினைக்கும் த.வெ.க. அரசின் எண்ணம் நிச்சயம் ஈடேறாது!” எனத் தனது அறிக்கையில் ஆவேசமாகத் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.