ரூ.1,200 கோடி தலைமைச்செயலக திட்டம்.. எந்த ஆய்வுமே நடத்தப்படவில்லையா? அம்பலமான ஆர்டிஐ தகவல்!

சென்னை பட்டினப்பாக்கத்தில் ரூ.1,200 கோடி செலவில் புதிய தலைமைச் செயலகம் கட்டுவது தொடர்பாக எந்தவொரு சாத்தியக்கூறு ஆய்வறிக்கையும் (Feasibility Report) தயாரிக்கப்படவில்லை எனத் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் (RTI) கீழ் அளிக்கப்பட்ட பதிலில் தெரியவந்துள்ளது. மயிலை பகுதி அனைத்துக் கிராம மீனவ பஞ்சாயத்து சபா சார்பில் தாக்கல் செய்யப்பட்ட ஆர்டிஐ மனுக்களுக்குப் பொதுப்பணித்துறை மற்றும் பொது (கட்டிடங்கள்) துறை இந்த அதிர்ச்சிளிக்கும் பதிலை அளித்துள்ளன.

திட்டம் தொடர்பாக எவ்வித அடிப்படை ஆய்வுகளும் மற்றும் சுற்றுச்சூழல் ஆவணங்களும் அரசிடம் இல்லை என்பது இப்பதில்கள் மூலம் உறுதியாகியுள்ளது. அடிப்படை ஆய்வுகள் எதுவுமின்றி அவசர அவசரமாக நிலம் தேர்வு செய்யப்பட்டுள்ளதாகக் குற்றம் சாட்டியுள்ள பஞ்சாயத்து சபா ஒருங்கிணைப்பாளர் கே.பாரதி, திட்டத்தின் அரசாணையை (G.O. No. 564) உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

சுமார் 20 லட்சம் சதுர அடியில் அமையவுள்ள இம்மாபெரும் திட்டத்திற்காகப் பட்டினப்பாக்கத்தில் உள்ள 25.55 ஏக்கர் நிலம் அடையாளம் காணப்பட்டுள்ளது. இந்த நிலம் 1957-ல் முள்ளிக்குப்பம் மற்றும் ஸ்ரீனிவாசபுரம் மீனவக் குடும்பங்களின் குடியிருப்புத் தேவைக்காகக் கையகப்படுத்தப்பட்டது என்பதால், அதே நிலத்தை மீனவர்களின் நிரந்தர வீட்டு வசதிக்காகவே மீண்டும் ஒதுக்கீடு செய்ய வேண்டும் எனக் கோரி முதலமைச்சர் சி. ஜோசப் விஜய்யிடம் வியாழக்கிழமை மனு அளிக்கப்பட்டுள்ளது.

புதிய தலைமைச்செயலகப் பகுதியால் பாதுகாப்பு மண்டலக் கட்டுப்பாடுகள் மற்றும் போக்குவரத்து நெரிசல் அதிகரிக்கும் என அப்பகுதி மக்கள் அஞ்சுகின்றனர். இதனால் முள்ளிக்குப்பம், முள்ளி நகர் உள்ளிட்ட 10 மீனவக் கிராமங்களைச் சேர்ந்த 1,500-க்கும் மேற்பட்ட குடும்பங்களின் அன்றாட மீன்பிடித் தொழிலும் வாழ்வாதாரமும் கடுமையாகப் பாதிக்கப்படும் அபாயம் உருவாகியுள்ளது.

மேலும், கடற்கரை ஒழுங்குமுறை மண்டல (CRZ) அனுமதியைப் பெறாமலும், மக்களிடம் கருத்துக்கேட்புக் கூட்டங்களை நடத்தாமலும் அங்குள்ள 96 பழைய குடியிருப்புகளை இடிக்கத் தமிழ்நாடு வீட்டுவசதி வாரியம் டெண்டர் கோரியுள்ளது. எந்தவொரு அதிகாரப்பூர்வ ஆய்வறிக்கையும் இல்லாமல் இவ்வளவு பெரிய திட்டத்தைக் கடலோரப் பகுதியில் செயல்படுத்துவது சட்டத்திற்குப் புறம்பானது என அப்பகுதி மீனவ அமைப்புகளும் அரசியல் தலைவர்களும் கடும் எதிர்ப்பைப் பதிவு செய்து வருகின்றனர்.