அமெரிக்க மண்ணில் அரங்கேறவிருந்த பயங்கர கொலைச் சதி: டிரம்பைத் தீர்த்துக்கட்ட கூலிப்படை தேடிய பாகிஸ்தான் உளவாளிக்கு 27.5 ஆண்டு சிறை!

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பை அமெரிக்க மண்ணிலேயே தீர்த்துக்கட்ட ஈரான் பின்னணியுடன் பின்னப்பட்ட பயங்கர கொலைச் சதித் திட்டம் சர்வதேச அரங்கில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த வழக்கில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட பாகிஸ்தானைச் சேர்ந்த 48 வயதான ஆசிப் மெர்ச்சன்ட் என்பவருக்கு, 330 மாதங்கள் அதாவது 27.5 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத் தண்டனை விதித்து நியூயார்க் ப்ரூக்ளின் பெடரல் நீதிமன்ற நீதிபதி எரிக் ஆர். கோமிட்டி தீர்ப்பளித்துள்ளார்.

அமெரிக்க நீதித்துறை வெளியிட்டுள்ள அதிர்ச்சியூட்டும் தகவல்களின்படி, ஆசிப் மெர்ச்சன்ட் 2022-ம் ஆண்டின் இறுதியில் ஈரானின் புரட்சிகர பாதுகாப்புப் படையுடன் (IRGC) கைகோர்த்துள்ளார். ஆன்மீகப் பயணம் என்ற போர்வையில் ஈரான் சென்ற அவர், தனது உறவினர் மூலமாக யூசுப் மெர்ஹர்தாத் என்ற ஈரானிய உளவுத்துறை அதிகாரியுடன் தொடர்பை ஏற்படுத்திக்கொண்டார்.

சுமார் 18 மாதங்களில் தெஹ்ரான் நகரில் அந்த அதிகாரியை 15 முறை நேரில் சந்தித்த மெர்ச்சன்ட், உளவுத் தடுப்பு நடவடிக்கைகளில் தீவிரப் பயிற்சி பெற்றுள்ளார். அமெரிக்காவின் முக்கிய அரசியல் தலைவர்களைக் கொலை செய்யும் அசைன்மென்டுடன் 2024-ம் ஆண்டின் தொடக்கத்தில் அவர் அமெரிக்காவுக்குள் ஊடுருவியுள்ளார்.

அமெரிக்கா வந்தடைந்ததும், கொலைத் திட்டத்தைச் செயல்படுத்த தனக்குத் தெரிந்த நபர் ஒருவரை மெர்ச்சன்ட் அணுகியுள்ளார். ஆனால், சதியின் விபரீதத்தை உணர்ந்த அந்த நபர் உடனடியாக எஃப்.பி.ஐ (FBI) புலனாய்வு அமைப்புக்கு ரகசியத் தகவல் அளித்து அப்ரூவராக மாறினார். இதனையடுத்து, எஃப்.பி.ஐ அதிகாரிகளே கூலிப்படையினர் போல மாறுவேடத்தில் மெர்ச்சன்ட்டைச் சந்தித்துப் பேசியுள்ளனர்.

அவர்களை உண்மையான கொலையாளிகள் என நம்பிய மெர்ச்சன்ட், பலமுறை ரகசியச் சந்திப்புகளை நடத்தியதோடு, முன்பணமாக 5,000 அமெரிக்க டாலர்களையும் வழங்கியுள்ளார். திட்டத்தை முடித்துவிட்டு அமெரிக்காவை விட்டுத் தப்பிச் செல்வதற்காக விமான நிலையம் புறப்படத் தயாரானபோது, ரிச்மண்ட் நகரில் வைத்து புலனாய்வு அதிகாரிகள் அவரை அதிரடியாகக் கைது செய்தனர்.

கடந்த மார்ச் மாதம் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட மெர்ச்சன்ட்டுக்கு தற்போது தண்டனை விதிக்கப்பட்டுள்ள நிலையில், அமெரிக்க அட்டர்னி ஜெனரல் டாட் பிளான்ச் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார். அதிபர் டிரம்பைக் கொல்ல வந்த ஈரானிய ஏஜென்ட்டுக்குத் தகுந்த தண்டனை கிடைத்துள்ளதாகவும், அமெரிக்கத் தலைவர்களுக்கு எதிரான வெளிநாட்டு பயங்கரவாத சதிகளை ஒருபோதும் சகித்துக்கொள்ள மாட்டோம் என்றும் அவர் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.