டெல்லியில் நடைபெற்று வரும் 18-வது பிரிக்ஸ் உச்சி மாநாட்டின் இடையே, ரஷிய அதிபர் விளாடிமிர் புடினைப் பிரதமர் நரேந்திர மோடி நேரில் சந்தித்துப் பேசினார். இந்தச் சந்திப்பின் போது, தமிழ்நாட்டின் புகழ்பெற்ற தெய்வப் புலவர் திருவள்ளுவர் இயற்றிய திருக்குறளின் ரஷிய மொழியாக்கப் புத்தகத்தைப் பிரதமர் மோடி, அதிபர் புடினுக்குப் பரிசாக வழங்கி கௌரவித்தார். உலகளவில் எல்லைகளைத் தாண்டி அறம், அரசியல் மற்றும் வாழ்வியல் நெறிகளைப் போதிக்கும் திருக்குறளின் காலத்தால் அழியாத அறிவாற்றலை ரஷிய மக்களிடம் கொண்டு சேர்க்கும் நோக்கில் இந்தப் பரிசு வழங்கப்பட்டதாகப் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். 1,330 அருங்குறட்பாக்களைக் கொண்ட திருக்குறள், உலகளவில் மிகச் சிறந்த வழிகாட்டி நூலாகப் போற்றப்படும் வேளையில், இந்த உலகளாவிய மாநாட்டில் தமிழுக்குக் கிடைத்துள்ள இந்த மரியாதை தமிழர்களிடையே பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ரஷ்ய அதிபர் புதினுக்கு தெய்வப்புலவர் திருவள்ளுவரின் திருக்குறள் ரஷ்ய மொழிபெயர்ப்பு பிரதியை பரிசளித்தேன். திருக்குறள் தேச எல்லைகள், மொழிகளைக் கடந்த திருவள்ளுவரின் அளப்பரிய ஞானத்தைப் பறைசாற்றுகிறது. pic.twitter.com/7bNWMcMTH7
— Narendra Modi (@narendramodi) September 11, 2026
வெறும் இலக்கியமாக மட்டுமின்றி, இந்திய ராணுவத்தின் உத்திகள் மற்றும் ராஜதந்திர நடவடிக்கைகளுக்கும் திருக்குறள் மிகப்பெரிய வழிகாட்டியாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது. உலகின் இரண்டாவது மிகப்பெரிய ராணுவமான இந்திய ராணுவம், ‘உத்பவ்’ (Project Udbhav) என்ற திட்டத்தின் கீழ், நமது பண்டைய காலத்து ராஜதந்திரம், போர்த்தந்திரங்கள் மற்றும் நிர்வாகத் திறமைகளைக் கற்றுக் கொள்ளத் திருக்குறள், கௌடில்யரின் அர்த்தசாஸ்திரம் மற்றும் காமந்தகரின் நீதிசாரம் ஆகிய நூல்களைத் தீவிரமாக ஆய்வு செய்து வருகிறது. ஆங்கிலேயர் காலத்து அடிமைத்தனமான கலாச்சார முறைகளைக் கைவிட்டு, இந்தியப் பாரம்பரியம் மற்றும் கலாச்சாரத்தை பாதுகாப்புத் துறை உள்ளிட்ட அனைத்து முக்கியத் துறைகளிலும் மீட்டெடுக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
கடந்த 2021-ஆம் ஆண்டு குஜராத்தின் கேவடியாவில் நடைபெற்ற முப்படைத் தளபதிகள் மாநாட்டில், ராணுவத்தில் நிலவி வந்த colonial காலத்து பழைய முறைகளை முழுமையாக ஒழித்து, இந்திய மயமாக்கலை உருவாக்க வேண்டும் என்று பிரதமர் மோடி அழைப்பு விடுத்திருந்தார். இதன் தொடர்ச்சியாகவே, இந்தியக் கடற்படை தனது கொடியில் பிரிட்டனின் செயின்ட் ஜார்ஜ் சிலுவைச் சின்னத்திற்குப் பதிலாக, மராத்திய பேரரசர் சத்ரபதி சிவாஜியின் இலச்சினையைச் சேர்த்தது. மேலும், ராணுவ அதிகாரிகள் பேட்டன் (baton) ஏந்திச் செல்லும் பழக்கம் கைவிடப்பட்டதுடன், பிரிட்டிஷ் காலத்து ராணுவக் குடியிருப்புப் பகுதிகள் (cantonments) ராணுவ நிலையங்களாகப் பெயர் மாற்றம் செய்யப்பட்டன. 2047-ஆம் ஆண்டிற்குள் இந்தியாவை முழுமையான வளர்ச்சி அடைந்த நாடாக மாற்றுவதற்கான ‘பஞ்ச பிரண்’ கொள்கையின் ஒரு பகுதியாகத் தமிழின் பழம்பெரும் தத்துவங்கள் உலகளவிலும், நமது நாட்டின் பாதுகாப்பு அமைப்புகளிலும் புதிய பரிணாமம் பெற்று வருகின்றன.





