“சம்பிரதாயமா? சாதனை படைக்குமா?” – முதல்வர் விஜய்யின் ஐஏஎஸ், ஐபிஎஸ் மாநாட்டுக்கு ஆர்.பி.உதயகுமார் எழுப்பியுள்ள அதிரடி கேள்விகள்!

சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் சி. ஜோசப் விஜய் தலைமையில் ஐஏஎஸ், ஐபிஎஸ் மற்றும் ஐஎஃப்எஸ் அதிகாரிகளின் இரண்டு நாள் உயர்மட்ட மாநாடு இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது. தவெக அரசு பொறுப்பேற்ற பிறகு நடைபெறும் முதல் அதிகாரப்பூர்வ மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் காவல் துறை அதிகாரிகள் மாநாடு என்பதால் இதன் மீது பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. இந்நிலையில், இந்த மாநாட்டின் செயல்பாடுகள் மற்றும் நோக்கங்கள் குறித்து பிரதான எதிர்க்கட்சியான அதிமுகவின் முக்கியத் தலைவரும் முன்னாள் அமைச்சருமான ஆர்.பி.உதயகுமார் பல்வேறு அதிரடி கேள்விகளை எழுப்பியுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், இந்த மாநாடு வெறும் சம்பிரதாயமாக முடியுமா அல்லது மக்கள் நலனில் சாதனை படைக்குமா என மக்கள் உற்று நோக்கிக் கொண்டிருப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.

பாலியல் குற்றங்களுக்கு தீர்வு ஏற்படுமா?

ஆர்.பி.உதயகுமார் தனது அறிக்கையில் தற்போதைய தமிழகத்தின் சட்டம்-ஒழுங்கு நிலை குறித்து கடுமையான கவலைகளைப் பகிர்ந்துள்ளார். “தமிழகத்தில் குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் அரங்கேறாத நாளே இல்லை என்கிற அவல நிலை தொடர்ந்து நீடித்து வருகிறது. நேற்று கூட ராமநாதபுரத்தில் சிறுமி ஒருவர் மாயமாகி, பின்னர் கிணற்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் ஒட்டுமொத்த மாநிலத்தையும் உலுக்கியுள்ளது.

இதையும் படிக்க தவறாதீர்கள்:  மெட்ரோ ரயிலில் முதல்வர் விஜய் சர்ப்ரைஸ் ஆய்வு: பொதுமக்களுடன் செல்ஃபி... தோளில் சாய்ந்த பெண்மணி!

இத்தகைய மிக மோசமான பாலியல் குற்ற சம்பவங்களுக்கு இந்த மாநாட்டின் மூலம் தவெக அரசு நிரந்தர முற்றுப்புள்ளி வைக்குமா? இதற்கான முறையான தீர்வுகள் எட்டப்படுமா? என்கிற மிகப்பெரிய எதிர்பார்ப்பும் ஏக்கமும் தமிழக மக்களிடம் இருக்கிறது” என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

விமர்சனங்கள் தவெக அரசை பலப்படுத்தவே!

ஆர்.பி.உதயகுமார் காரசாரப் பேச்சு: “காலையில் அனுப்பப்படும் கோப்புகளுக்கு மாலைக்குள் முதல்வர் கையெழுத்திட்டு விடுகிறார் என்கிற செய்திகள் விளம்பரமாக வருகின்றன. ஆனால், களத்தில் போதைப்பொருள் நடமாட்டத்திற்கு இந்த மாநாட்டின் மூலம் நிரந்தர தீர்வு ஏற்படுமா என்பதுதான் முக்கியம். எங்கள் விமர்சனங்களை ஏளனம் செய்யாமல், தவெக அரசு தன் மீது வைக்கப்படும் நியாயமான குற்றச்சாட்டுகளில் இருக்கும் உண்மையை உணர்ந்து ஆக்ஷன் எடுக்க வேண்டும். இந்த விமர்சனங்கள் அரசை பலப்படுத்தவே அன்றி, இதில் அரசியல் உள்நோக்கம் இல்லை.”

புதிதாகப் பொறுப்பேற்றுள்ள தவெக அரசுக்கு நிர்வாகக் கோளாறுகளையும், மக்கள் சந்திக்கும் அத்தியாவசியப் பிரச்சினைகளையும் சுட்டிக்காட்டுவது எதிர்க்கட்சியின் கடமை என்று கூறியுள்ள அவர், இந்த மாநாடு வெறும் வாய்வார்த்தை ஆலோசனையாக இல்லாமல், பெண்களுக்குப் பாதுகாப்பான சூழலை உருவாக்கும் மாநாடாக மாற வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.