தமிழக முதலமைச்சர் சா. ஜோசப் விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு சென்னை எழும்பூர் அரசு தாய் சேய் நல மருத்துவமனையில் இன்று பிறந்த 30 குழந்தைகளுக்குத் தலா ஒரு கிராம் தங்க மோதிரம் மற்றும் நலப் பெட்டகங்கள் வழங்கும் விழா நடைபெற்றது. தவெக அரசின் அமைச்சர்கள் கே.ஏ.செங்கோட்டையன், ராஜ்மோகன், ஸ்ரீநாத் ஆகியோர் இந்த விழாவில் கலந்துகொண்டு குழந்தைகளுக்குத் தங்க மோதிரங்களை அணிவித்து நற்சான்றிதழ்களை வழங்கினர்.
இதன் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் சட்டமன்ற விவாதங்கள் மற்றும் மாநிலத்தின் சட்டம் ஒழுங்கு நிலவரம் குறித்துப் பல்வேறு முக்கிய விபரங்களைப் பகிர்ந்துகொண்டார். கடந்த காலங்களில் திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியைப் போல எதிர்க்க உறுப்பினர்கள் ஒரு வார்த்தை சொன்ன உடனே அமைச்சர்கள் எழுந்து குறுக்கீடு செய்யும் பழைய காலம் தற்போது தவெக ஆட்சியில் முழுமையாக மாற்றப்பட்டுள்ளது.
எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அவையில் தங்களது கருத்துக்களை முழுமையாகப் பேசி முடித்த பிறகுதான் அதற்கு அரசுத் தரப்பில் அமைச்சர்கள் விளக்கமளிக்க வேண்டும் என்று நம்முடைய முதலமைச்சர் விரும்புகிறார். அவையில் யார் என்ன பேசினாலும் அதற்கான முறையான பதில்களைத் தரவுகளுடன் தயாராக வைத்துக் கொள்ளுமாறு அமைச்சர்களுக்கு முதல்வர் அறிவுறுத்தியுள்ளார்.
இதற்கு முன்னால் சட்டமன்றத் தொடர்களில் எதிர்க்கட்சிகள் பேசத் தொடங்கின உடனேயே நான்கு அமைச்சர்கள், ஐந்து அமைச்சர்கள் என அடுத்தடுத்துக் குறுக்கீடுகள் வந்ததை மக்கள் கண்கூடாகப் பார்த்திருக்கிறார்கள். ஆனால் தற்பொழுது சட்டமன்றத்தின் முழு நிகழ்வுகளும் எவ்வித தடையுமின்றி நேரலையில் ஒளிபரப்பப்பட்டு வருவதால் அவையின் வெளிப்படைத்தன்மை முழுமையாக உறுதி செய்யப்பட்டுள்ளது.
சட்டமன்றத்தில் எதிர்க்கட்சிகள் எழுப்பியுள்ள சட்டம் ஒழுங்கு பிரச்சினையைப் பொறுத்தவரையில் அரசுத் தரப்பில் புள்ளிவிவரங்களுடன் தகுந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. முந்தைய திமுக ஆட்சிக் காலத்தில் சட்டம் ஒழுங்கு என்னென்ன நிலைகளில் இருந்தது என்பது குறித்த ஒப்பிட்டுப் புள்ளிவிவரங்கள் அவையில் இன்று விரிவாக எடுத்துரைக்கப்பட்டுள்ளன.
சட்டம் ஒழுங்கு தொடர்பான எதிர்க்கட்சிகளின் அனைத்துக் கேள்விகளுக்கும் முதலமைச்சர் விஜய் நாளை சட்டமன்றத்தில் விரிவான அதிகாரப்பூர்வ பதிலுரையை வழங்க உள்ளார். அதேபோல் திருவள்ளூர் பெரியபாளையம் அமோனியா வாயு கசிவு விபத்தினால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்குத் தொழிலாளர் நலத்துறை, சுற்றுச்சூழல் மற்றும் மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் உள்ளிட்ட அனைத்துத் துறைகளும் ஒருங்கிணைந்து போர்க்கால அடிப்படையில் தேவையான அனைத்துப் பணிகளையும் மேற்கொண்டு வருகின்றன.
விபத்தில் பாதிக்கப்பட்டவர்கள் வடமாநிலத் தொழிலாளர்கள் என்பதால் அவர்களின் குடும்பங்களுக்கான கூடுதல் நலத்திட்ட உதவிகள் மற்றும் நிவாரணங்கள் குறித்து முதலமைச்சர் விரைவில் இறுதி முடிவெடுத்து அறிவிப்பார் என்று அமைச்சர் செங்கோட்டையன் தனது பேட்டியில் குறிப்பிட்டார்.





