முதலமைச்சர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) நடத்திய பொது நிகழ்ச்சியில், பிரபல நாட்டுப்புறப் பாடகர் வேல்முருகன் புகழ்பெற்ற ‘மருதமலை மாமணியே முருகையா’ என்ற பக்திப் பாடலின் வரிகளை மாற்றி, விஜய்யைப் புகழும் வகையில் பாடியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. தமிழர்களின் ஆன்மீக மற்றும் பண்பாட்டு அடையாளமான தமிழ்க் கடவுள் முருகனின் பாடலை அரசியல் ஆதாயத்திற்காகத் தவறாகப் பயன்படுத்தியதாகக் கூறி, தமிழகம் முழுவதும் பல்வேறு தரப்பினரும் தவெகவிற்கு எதிராகக் கண்டனம் தெரிவித்து வந்தனர்.
இந்தச் சூழலில், முருகனை அவமதிக்கும் வகையில் நடந்து கொண்ட தவெக நிர்வாகிகள் மற்றும் பாடகர் வேல்முருகன் மீது காவல் துறை உடனடியாகக் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி, நாம் தமிழர் கட்சியினர் கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் திரண்டு சென்று அதிரடியாகப் புகார் மனு அளித்துள்ளனர்.
கோவை மண்டல நாம் தமிழர் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கோவை மாநகர காவல் ஆணையாளரிடம் நேரில் அளித்த அந்த மனுவில், பக்திப் பாடலின் புனிதத் தன்மையைக் கெடுத்து, மத உணர்வுகளையும் பண்பாட்டு மதிப்புகளையும் புண்படுத்தும் வகையில் பாடலின் வரிகள் மாற்றப்பட்டதாகக் குற்றம் சாட்டியுள்ளனர். மேலும், இத்தகைய செயல்கள் சமூக அமைதியைக் குலைக்கும் அபாயம் கொண்டவை என்றும் குறிப்பிட்டுள்ளனர்.
“தமிழ்க் கடவுள் முருகனை அவமதிப்பு செய்யும் வகையில் செயல்பட்ட தவெகவினர் மீது ஏன் காவல் துறை நடவடிக்கை எடுக்க மறுக்கிறது?” என நாம் தமிழர் கட்சியினர் கேள்வி எழுப்படியுள்ளனர். ஆட்சியில் உள்ள தவெக அரசிற்கு எதிராகத் தமிழ்த் தேசியக் கோட்பாடு மற்றும் பண்பாட்டு அடையாளங்களை முன்னிறுத்தி அரசியல் செய்து வரும் நாம் தமிழர் கட்சி அளித்துள்ள இந்தப் புகார் மனு கோவை அரசியல் வட்டாரத்தில் பரவலான கவனத்தைப் பெற்றுள்ளது.





